
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலராக ஜெயமுருகன்(38) பணியாற்றி வருகிறார். அங்கு கிராம நிர்வாக உதவியாளராக தேன்மொழி உள்ளார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மேகநாதன் என்பவர் தனது நிலத்திற்கு அளவீடு செய்து பட்டா மாற்றித் தரும்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்
நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றித் தர வி.ஏ.ஓ ஜெயமுருகன், மேகநாதனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு மேகநாதன் தகவல் அளித்தார்.
இதனிடையே ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று மேகநாதன் விஏஓ ஜெயமுருகனிடம் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர், மேலும் விஏஓ ஜெயமுருகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தேன்மொழி ஆகியோரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயியிடம் விஏஓ பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் வருவாய்த் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.