ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 50 இடங்களில் வென்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.! அ.தி.மு.க.வுக்கு கடும் பின்னடைவு!! 

11:28 PM Feb 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக 48 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரிகள் கட்சிகளுக்கு 12 வார்டுகளை ஒதுக்கி இருந்தது. அ.தி.மு.க. அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது.

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 539 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 154 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 64.36 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

மாநகராட்சியில் பதிவான வாக்குகள், சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் கல்லூரி மையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 22) எண்ணப்பட்டன. காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 8 வார்டுகள் வீதம் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இரவு 07.00 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவு அடைந்தது.

சேலம் மாநகராட்சியில் தொடக்கம் முதலே தி.மு.க. முன்னிலை வகித்தது. காலை 09.00 மணி முதல் வெற்றி நிலவரம் வெளிவரத் தொடங்கியது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. 46 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 2006&2011ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாநகராட்சி மேயர் சீட்டைப் பிடித்துள்ளது.

கடந்த 2011- ஆம் ஆண்டுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் தி.மு.க. கூட்டணி மொத்தம் 50 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன.

தனித்து களம் கண்ட அ.தி.மு.க., 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாநகராட்சி 19- வது வார்டில் தி.மு.க.வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியைச் சேர்ந்த தேன்மொழி, சுயேச்சையாக போட்டியிட்டார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், நம்பிக்கையுடன் சுயேச்சையாக களமிறங்கிய தேன்மொழி வெற்றி பெற்றார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவே, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அவர் மீண்டும் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இதனால் சேலம் மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களை உற்சாக மிகுதியில் கட்சியினர் தோளில் தூக்கிக்கொண்டு வாக்கு எண்ணும் மைய வளாகத்திலேயே சிறிது தூரம் ஊர்வலமாகச் சென்றனர். வளாகத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த 2021- ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அ.தி.மு.க. 8 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இருந்த பா.ம.க. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பான்மை பகுதிகளை தங்கள் எம்.எல்.ஏ.க்கள் வசம் வைத்திருந்தும் இந்தமுறை மாநகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. வெறும் 7 கவுன்சிலர் இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் (மொத்தம் 60 வார்டுகள்):

(வார்டு எண் வாரியாக)

1. தமிழரசன் (தி.மு.க.)
2. பன்னீர்செல்வம் (தி.மு.க.)
3. குமரவேல் (தி.மு.க.)
4. மகேஸ்வரி சேகர் (சுயேச்சை)
5. த. தனலட்சுமி (தி.மு.க.)
6. ராமச்சந்திரன் (தி.மு.க.)
7. சாரதாதேவி (காங்கிரஸ்)
8. மூர்த்தி (தி.மு.க.)
9. தெய்வலிங்கம் (தி.மு.க.)
10. ஆர்.சாந்தி (தி.மு.க.)
11. ஹிந்துஜா (தி.மு.க.)
12. சங்கீதா (தி.மு.க.)
13. ராஜ்குமார் (தி.மு.க.)
14. சாந்தமூர்த்தி (தி.மு.க.)
15. உமாராணி (தி.மு.க.)
16. வசந்தா மயில்வேல் (தி.மு.க.)
17. ராஜேஸ்வரி (தி.மு.க.)
18. சக்கரை ஆ.சரவணன் (தி.மு.க.)
19. தேன்மொழி (சுயேச்சை)
20. பிரதீப் (தி.மு.க.)
21. ஜனார்த்தனன் (அ.தி.மு.க.)
22. கே.சி.செல்வராஜ் (அ.தி.மு.க.)
23. சிவகாமி (தி.மு.க.)
24. சந்திரா (அ.தி.மு.க.)
25. சசிகலா (அ.தி.மு.க.)
26. கலையமுதன் (தி.மு.க.)
27. சவீதா (தி.மு.க.)
28. ஜெயக்குமார் (தி.மு.க.)
29. கிரிஜா குமரேசன் (காங்கிரஸ்)
30. அம்சா (தி.மு.க.)
31. சையத் மூஸா (சுயேச்சை)
32. பவுமிகா தப்சிரா (தி.மு.க.)
33. ஜெயஸ்ரீ (தி.மு.க.)
34. ஈசன் டி.இளங்கோ (தி.மு.க.)
35. பச்சியம்மாள் (தி.மு.க.)
36. யாதவமூர்த்தி (அ.தி.மு.க.)
37. திருஞானம் (தி.மு.க.)
38. தனசேகர் (தி.மு.க.)
39. மா.ஜெயந்தி (தி.மு.க.)
40. மஞ்சுளா.ஜி (தி.மு.க.)
41. பூங்கொடி (தி.மு.க.)
42. மஞ்சுளா (தி.மு.க.)
43. குணசேகரன் (தி.மு.க.)
44. இமயவர்மன் (வி.சி.க.)
45. சுகாசினி (தி.மு.க.)
46. மோகனபிரியா (தி.மு.க.)
47. புனிதா (தி.மு.க.)
48. விஜயா ராமலிங்கம் (தி.மு.க.)
49. மோகனபிரியா (அ.தி.மு.க.)
50. லாரி பழனிசாமி (தி.மு.க.)
51. பி.எல். பழனிசாமி (தி.மு.க.)
52. அசோகன் (தி.மு.க.)
53. ஷாதாஜ் (தி.மு.க.)
54. கனிமொழி (தி.மு.க.)
55. தனலட்சுமி (தி.மு.க.)
56. சரவணன் (தி.மு.க.)
57. சீனிவாசன் (தி.மு.க.)
58. கோபால் (தி.மு.க.)
59. முருகன் (தி.மு.க.)
60. வரதராஜ் (அ.தி.மு.க.)


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT