ADVERTISEMENT

சீன் போட்ட சின்னப்பன்... கெத்து காட்டிய மார்க்கண்டேயன்!

11:13 AM Oct 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட விளாத்திகுளம் மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தி.மு.க.வில் சேர்ந்தபிறகு சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மார்க்கண்டேயன் விளாத்திகுளம் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.



இந்த சூழ்நிலையில் எதிரணியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ சின்னப்பன் மீண்டும் சீட்டுக்காக காய்நகர்த்தி வருகிறார். இதற்காக அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்றாலும், அமைச்சர், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஒருவருக்கு சீட் தருவதற்கு கட்சித் தலைமையிடம் சிபாரிசு செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. தி.மு.க.வில் கிட்டத்தட்ட மார்க்கண்டேயனுக்குத்தான் சீட் என்பது உறுதியாகி விட்டது. அமைச்சரோ வேறு ஒருவருக்கு சிபாரிசு செய்கிறார். இதனால் கட்சித்தலைமையின் கவனத்தை ஈர்க்க திட்டம் தீட்டினார் சின்னப்பன். இதற்காக அ.தி.மு.க 49-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'மார்க்கண்டேயன் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு இப்போது எதிரணியில் இணைந்திருப்பதாக' சரமாரியாகத் திட்டித்தீர்த்தார்.

இந்நிலையில் விளாத்திகுளத்தில் 22ஆம் தேதி தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் 3 நாட்களுக்கு முன்னரே அனுமதி வாங்கிவிட்டார் மார்க்கண்டேயன். அன்றைய தினமும் மார்க்கண்டேயன் மக்களை திரட்டி 'மாஸ்' காட்டிடுவார் என்பதை அறிந்த சின்னப்பன், நாங்களும் அதே நாளில் கொடியேற்றப்போகிறோம், அனுமதி தாருங்கள் என காவல்துறையிடம் மனு கொடுத்தார். நீங்கள் 'முதல்நாள் கொடியேற்றுங்கள் அல்லது அவர்கள் கொடியேற்றிய மறுநாள் ஏற்றிக்கொள்ளுங்கள்' எனக் கூறி, காவல்துறை அ.தி.மு.க சின்னப்பனுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதனால் பிரச்சனையைக் கிளப்பும் முடிவில் கட்சி நிர்வாகிகளை திரட்டிய சின்னப்பன் தலைமையிலான அ.தி.மு.கவினர், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளையும் மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தடுக்க முயன்ற டி.எஸ்.பி கலைக்கதிரவனை கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சின்னப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தார்.


மார்க்கண்டேயனை எதிர்க்க சின்னப்பன் தான் சரியான ஆள் எனக் கட்சித் தலைமை நினைக்க வேண்டும் என முடிவு செய்து சின்னப்பன் செய்த செயல், அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. எம்.எல்.ஏ சின்னப்பன் தேவையில்லாமல் சின்னப்பிள்ளைத் தனமான வேலைசெய்து மார்க்கண்டேயனின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டுள்ளதாக புலம்புகின்றனர் ர.ரக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT