Skip to main content

“எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியவர் கொஞ்சல், கெஞ்சல், தாஜா செய்கிறார்”- பழனிசாமி கண்டனம்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Palaniswami condemns DMK government regarding Meghadatu Dam

 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கடந்த 30.5.2023 அன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவரது செயலுக்கு, தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய திமுக அரசின் நீர்வளத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சர், கொஞ்சல் கெஞ்சல் மற்றும் தாஜா செய்து கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Palaniswami condemns DMK government regarding Meghadatu Dam

 

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன? தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் உள்ளதால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தோடு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது? கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும், அது காவேரி பிரச்சினை என்றாலும், மேகதாது பிரச்சினை என்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது.

 

ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தொடர் சட்டப் போராட்டத்தினாலும் 5.2.2007 அன்று காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான  அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு, இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவில் 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது.

 

கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது. மேலும், நான் முதலமைச்சராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.

 

பன்மாநில நதிநீர் தாவா சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவேரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் இந்த தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார்.