ADVERTISEMENT

மருத்துவரை கொடூரமாகத் தாக்கிய லாரி ஓட்டுநர்; பரவும் வீடியோ காட்சி

11:33 AM Nov 03, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை, பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மேகஷாம் (33). இவருக்குத் திருமணமாகி தாரணி(30) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் மருத்துவர்களாகத் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த தம்பதி நேற்று (02-11-23) பணி முடிந்து தங்களது வீட்டிற்கு காரில் பல்லாவரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, இவர்களுடைய காரின் மீது உரசி விரைந்து சென்றது. இதில் தம்பதியின் கார் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த மேகஷாம், காரில் விரைந்து சென்று அந்த லாரியின் முன் காரை நிறுத்தினார். அதன் பின், அந்த லாரி ஓட்டுநரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், மருத்துவர் மேகஷாமை சரமாரியாகத் தாக்கினார். அருகில் இருந்த தாரணி, கதறி அழுது நிறுத்த சொன்னபோது கூட லாரி ஓட்டுநர் தாக்குதலில் ஈடுபட்டார். இதை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

அதனைப் பார்த்த லாரி ஓட்டுநரும் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து வீடியோ எடுத்தவர்களை ஆபாசமாகத் திட்டினர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின், அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த லாரி ஓட்டுநரின் நண்பரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநர் சந்துரு (36) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநர் அதே பகுதியைச் சேர்ந்த சதிஷ் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்துரு மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மருத்துவர் மேகஷாமை லாரி ஓட்டுநர் தாக்குவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT