ADVERTISEMENT

குழந்தை விற்பனை; போலீசில் நாடகமாடிய தாய்

12:11 PM Jan 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் பெற்ற குழந்தையை தாய் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லால்குடி அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் பிரபு (வயது 42) . வக்கீல் பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி கவிதா வந்து சென்றதன் மூலம் பிரபுவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே கவிதா திருமணம் ஆகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் தரித்துள்ளார். அதைத் தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியாக இருந்த கவிதா கருவைக் கலைப்பதற்கு பிரபுவின் உதவியை நாடினார். ஆனால் 7 மாத கர்ப்பத்தை கலைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதிய அவர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தக் குழந்தையை விற்றுவிட முடிவு செய்தனர். இந்நிலையில் கவிதாவுக்கு குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து பிரபு அந்தக் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கவிதாவிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறி அவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கவிதா அந்தப் பணத்தில் நகைகளை வாங்கியுள்ளார்.

இதற்கிடையே குழந்தையை ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு பிரபு விற்பனை செய்தது கவிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தை விற்கப்பட்ட தகவலை போலீசாரிடம் மறைத்துவிட்டு குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாகவும் போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கவிதாவின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபுவும் அவரது இரண்டாவது மனைவி பானுவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்பனை செய்ததும், கவிதா குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்த கவிதாவை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வக்கீல் பிரபு, அவரது இரண்டாவது மனைவி பானு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர். இதில் வக்கீல் மீது குழந்தை கடத்தல், சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழந்தையை வக்கீல் பிரபு திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் விற்பனை செய்த தகவலும் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து துர்காவையும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். துர்காவும் இடைத்தரகராகச் செயல்பட்டு வேறு ஒருவருக்கு அந்தக் குழந்தையை விற்பனை செய்ததாகத் தெரிகிறது. ஆகவே இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளது. குழந்தை எங்கே இருக்கிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிரபு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ,உறையூர் துர்கா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT