
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் கணேசன்(55). இவர் சிறுகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் பழுதாகும் போதும், மின் இணைப்பு துண்டிக்கப்படும் போதும் சரி செய்யும் பணியைச் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் மின் மோட்டார் பழுதைச் சரி செய்ய சென்றுள்ளார். அப்போது மின் மோட்டார் அமைந்திருந்த அறைக்கு மின்சாரம் வராததால் அது நேரடியாக மின் கம்பத்தில் இருந்து வரவில்லை என்பதைக் கண்டறிந்தார். இதுகுறித்து அவர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமல், தானே அந்த மின்கம்பத்தில் ஏறி இணைப்பைச் சரி செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சிக்கி கணேசன் மின் கம்பியிலேயே தொங்கியுள்ளார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு சிறுகனூர் காவல்துறையினருக்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மின்கம்பத்தில் பாய்ந்த மின்சாரத்தை நிறுத்தி வைத்து அவரைக் கீழே இறக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.