ADVERTISEMENT

கடன் தவணையைக் கட்ட தவறிய கூலி தொழிலாளி; வீட்டைப் பூட்டிய தனியார் நிதி நிறுவனம்

12:27 PM Nov 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி வட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (37). இவரது மனைவி மகேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளியான குமார் தனது குடும்பத்துடன் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், குமார் குடும்பச் செலவுக்காக கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து கடனை, தவணை தவறாமல் செலுத்தி வந்த நிலையில், கடந்த கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் குமாரால் கடனைத் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூல் செய்வதை கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவும் இருந்தது.

இந்நிலையில், குமார் கடந்த மே மாதம் வரை வாங்கிய கடனுக்கு வட்டியுடன் ரூ.51,000 செலுத்தியுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு சில மாதங்கள் தவணை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் கும்பகோணம் தனியார் பைனான்ஸ் நிறுவனம் குமார் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூ.1.20,000 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளது.

மேலும் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் குமார் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, குழந்தைகளை வெளியே தள்ளி அவரது வீட்டில் உள்ள சாமான்களை தூக்கி வீசிவிட்டு இழுத்து பூட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆலங்குடி பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தனியார் நிதி நிறுவனத்தின் இத்தகையச் செயலைக் கண்டிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குமாரின் உடல்நிலை கருதி உரிய அவகாசம் கொடுத்து கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்து திமுகவைச் சேர்ந்த ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் தலைமையில் கிராம மக்கள், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிப்புக்கு உள்ளான குமார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT