ADVERTISEMENT

சித்திரமேழி கல்வெட்டு கண்டுபிடிப்பு!

10:25 AM Jan 14, 2020 | santhoshb@nakk…

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில் வரலாற்று ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ப.தரணிதரன் ஆகியோரிடம், புதுப்பேட்டை சுற்று வட்டாரத்தில் களப்பணி செய்யும் போது, கல்நார்சாம்பட்டி மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை சிலர் தகவல் சொல்ல அங்கு சென்று அதனை பார்த்துள்ளனர். அக்கல்லினைச் சுத்தம் செய்து மாவு தடவிப் படியெடுத்துப் பார்க்கையில் அது பழமையான ‘சித்திரமேழி’ கல்வெட்டு என்பதை அறிந்துள்ளனர்.

ADVERTISEMENT


அதுப்பற்றி அவர்கள் கூறும்போது, கல்நார்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் நிலமகள் என்கிற பூமாதேவி தலையில் கிரீடத்துடன் அமர்ந்த நிலையில் தம் இரு கைகளிலும் மலர்ச்செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். அவரது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும் அதன் மேல் கும்பக் கலசமும் வடிக்கட்டுள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும், கண்ணாடியும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்லானது 3 அடி அகலமும் 2½ உயரமும் கொண்டதாக உள்ளது.

ADVERTISEMENT


இது சித்திரமேழி என அழைக்கப்பம். ஏர்கலப்பை என்பது உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது. ‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பொருள் கொள்ளலாம். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பை எனச்சொல்லலாம். இது ஒரு வணிகக் குழுவிற்கான கல்வெட்டாகும்.


வணிகர்குழுக் கூட்டம் பெரும்பாலும்‘சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை' என்று அழைக்கப்படும். இடைக்காலத் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன.


சாலியர் என்ற பட்டு வணிகர்கள், நாட்டுச்செட்டி போன்றோர் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியர், திருப்பத்தூர் பகுதியில் ஐநூற்றுவர் ஆகிய வணிகப் பிரிவினர் குறித்து கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. கி.பி. 8 முதல் 13- ஆம் நூற்றாண்டு வரை இருந்த இவ்வணிக குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.


இவர்கள் தங்களைப் பூமி புத்திரர் என்று அழைத்துக் கொண்டனர். எட்டுத் திசைகளிலும் வணிகம் செய்த தென்னிந்திய வணிக குழுக்கள் மட்டுமே அரசர்களைப் போல தங்களுக்கென ஒரு படையை வைத்துக்கொள்ளவும், ஊர் பஞ்சாயத்து செய்யவும், தனியாகக் கல்வெட்டுக்கள் பொறித்துக்கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.


கல்நார்சாம்பட்டி மக்கள் பொங்கல் பண்டிகையின் போது‘காணும் பொங்கல்’அன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்து வந்து இவ்விடத்தில் கட்டி வைத்து பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


கல்நார்சாம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ள இவ்வணிகக் குழுக் கல்வெட்டானது கி.பி. 13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னாள் தொல்லியல்துறை உதவி இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன் அவர்கள் உறுதிசெய்தார் என்கிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT