ADVERTISEMENT

சிதம்பரம்: தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

08:09 PM Dec 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. இதில், வல்லம்படுகை சரவணன் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனம் திருடுபோனது. அதேபோல், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகில் நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனமும் திருடுபோனது.

இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் துரை, ரவி மற்றும் காவலர்கள் தனித்தனியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே சீர்காழியைச் சேர்ந்த இலக்கியன்(24) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குபின் முரணாகக் கூறினார். துருவித் துருவி விசாரணை செய்ததில் வாகனத்தை வல்லம்படுகை சரவணன் வீட்டு முன்பாகத் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

அதேபோன்று அம்மாபேட்டை அருகில் வாகனச் சோதனை செய்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி தணிக்கை செய்தபோது, அதில் வந்த இரண்டு நபர்கள் ஆவணங்களைக் காட்டாமல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். பின்னர் வாகனத்தை ஓட்டியவர் பூம்புகாரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) மற்றும் பின்னால் அமர்ந்து வந்த மயிலாடுதுறை திருவெண்காடு பிரபு (வயது 28) ஆகிய இருவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருடிவந்தது ஒப்புக்கொண்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவின் பேரில், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT