ADVERTISEMENT

இந்திய தேசம் முழுவதும் விவசாயமே அடிப்படை வாழ்வாதாரமாகும்... - தொல்.திருமாவளவன்

04:12 PM Jan 14, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


உழவர்பெருமக்களின் உவகைத் திருவிழாவான உன்னதப் பொங்கல் பெருவிழாவில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.


தமிழகம் உள்ளிட்ட இந்திய தேசம் முழுவதும் விவசாயமே அடிப்படை வாழ்வாதாரமாகும். பெரும்பான்மையான உணவுப்பொருள்கள் விவசாய உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது. எனினும், தற்போது பருவமழைப் பொய்த்து வருவதாலும் மாநிலங்களுக்குடையிலான ஆற்றுநீர்ச் சிக்கல்களாலும் அது நாளுக்குநாள் அருகி வருகிறது. இதனால் நிலமுடைய விவசாயிகள் மற்றும் நிலமில்லா உழைக்கும் விவசாயத் தொழிலாளர்களும் வறுமையில் வீழ்ந்து உழலும் அவலம் பெருகிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு காவிரி, பாலாறு, பவானி, முல்லைப்பெரியாறு போன்ற நதிகளில் அண்டைமாநிலங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பயிர்த்தொழிலை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இவ்வாறான உற்பத்திப் பாதிப்புகளும் கடன்சுமைகளும் விவசாயம் சார்ந்த பெரும்பான்மை மக்களை வெகுவாக சீரழித்துள்ளது. எனினும், இந்நிலையில்தான் பயிர்செய்யும் பாட்டாளிகளின் இந்தப் பண்பாட்டு விழாவையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகிவரும் நம் மண்ணை மீட்கவும் நமது வாழ்வாதரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பண்பாட்டுத்தளத்தில் மேலும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் சங்பரிவார் கும்பலிடமிருந்து இத்தேசத்தை மீட்கவும் இந்தப் பொங்கல் திருநாளில் சனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT