Skip to main content

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

ddd

 

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. 

 

சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 

கோடை வெயில்,  கரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75% வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த இயந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். 

 

அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

 

தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்ட அஸ்ஸாமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாஜக வேட்பாளரின் காரிலேயே கொண்டுசெல்லப்பட்டதையும், அந்தக் காரை மடக்கிப் பிடித்ததற்காக பொதுமக்கள்மீதே வழக்கு போடப்பட்டிருப்பதையும் பார்த்தோம். அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது. அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழைப்பு விடுத்த அ.தி.மு.க.; தொல். திருமாவளவன் எம்.பி. பதிலடி!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி வி.சி.க. உடன் தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும். வி.சி..க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. 3 மக்களவைத் தொகுதிகளை கேட்டு வருகிறது. தி.மு.க. 3 தொகுதிகளை தர மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத சூழல் நிலவி வருகிறது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். அவ்வாறு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் வி.சி.க.வுக்குத்தான் லாபம். வி.சி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூடுதல் தொகுதி கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தென் மாநில வி.சி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.03.2024) நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநில நிர்வாகிகளும், புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் இணையம் வாயிலாக கேரள மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆறு இடங்களிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறோம்.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும் அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் வி.சி.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் முதன்மையானது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்கிற அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கப் போவதில்லை. நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை ஒரு கருத்தியல் போராக அணுகுகிற காரணத்தினால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை. போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விரும்பியதைப் போன்று இருக்கலாம். விருப்பத்திற்கு மாறாகவும் இருக்கலாம். எங்கள் விருப்பத்தைவிடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதே மேலானதாக இருக்கிறது என நம்புகிறோம். அதன் அடிப்படையில் எங்கள் முடிவுகள் இருக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“4 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்” - தொல். திருமாவளவன் எம்.பி.

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
We have requested to allocate 4 seats Tol Thirumavalavan MP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று (12.02.2024) மாலை 03.00 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் வி.சி.கவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்பப் பட்டியலாக வி.சி.க. அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட விரும்புகின்ற தொகுதிகளை பட்டியலிட்டு  தி.மு.க.வினரிடம் வழங்கி உள்ளோம். அதில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய கூட்டணியாக தி.மு.க. கூட்டணி விளங்கி வருகிறது. இது இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.