/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chil-incident_1.jpg)
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த வாரம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் மாணவர் சின்னத்துரையின் தாயாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thol-thiruma_1.jpg)
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., நேரில் சென்று நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு காரணம் நாங்குநேரி சம்பவத்திற்கு முன்பே இங்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. தீவிரவாத பிரிவுகளைக் கண்காணிக்க க்யூ பிராஞ்ச் எனத்தனி உளவுப் பிரிவு இருப்பது போல் சாதி, மதவாத சக்திகளை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு தனி உளவுப்பிரிவு துவங்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக, தமிழகத்தைக் குறி வைத்திருக்கும் நிலையில் ஒரு தனி உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது. நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத்தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)