ADVERTISEMENT

மின்சார வாரியத்தின் அலட்சியம்... பறிபோன இரண்டு உயிர்கள்...

04:48 PM Jan 16, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் அருகே உள்ள கள்ளிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி விஜயராஜ் (45). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரி விஜயலட்சுமியுடன் (57) வசித்து வருகிறார். விஜயலட்சுமியின் கணவர் காலமாகிவிட்டதால் அவரது தோட்டத்தைக் கவனித்து வந்திருக்கிறார் விஜயராஜ்.

தங்களின் வயலையும், விளையும் மகசூலையும் தெய்வத்திற்கு ஒப்பாகக் கருதுவது விவசாயிகளின் குணம். அதற்கு ஏற்ப தைப் பொங்கல் தினத்தன்று தனது வயலில் விளைந்திருந்த மக்காச் சோளப்பயிருக்கு மாங்கொளை கட்டப் போயிருக்கிறார் விஜயராஜ். வேலையை முடித்துவிட்டு மாட்டிற்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த போது அருகில் ஹைவோல்டேஜ் மின்கம்பி அறுந்து கிடந்ததையறியாத விஜயராஜ், அதை மிதித்த நொடியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாகியும் தன் தம்பி வராததைக் கண்ட விஜயலட்சுமி வயலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு விஜயராஜின் மீது அறுந்து போன மின் வயர் கிடந்ததைப் பார்த்ததும், மின்சாரம் வந்து கொண்டிருப்பது தெரியாமல் கம்பியை அப்புறப்படுத்த முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமியின் உயிரிழந்துள்ளார்.

மதியம் நேரமாகியும் தனது தாயும், மாமாவும் வராததைக் கண்ட விஜயலட்சுமியின் மகள் தனலட்சுமி (18) வயலுக்குச் சென்ற போது, அங்கு இருவரும் மின்சாரம் தாக்கி இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ந்தவர் ஊருக்குத் தகவல் தெரிவிக்க, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குருவிகுளம் போலீஸார் மின் அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்து மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். பிறகு இருவரது உடல்களையும் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து குருவிகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வாரியத்தின் அலட்சியத்தின் காரணமாகவே இப்படி இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT