
கடந்த மார்ச் பாதியில் தேசத்தில் புகுந்த கரோனா எனும் மாயாவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதோடு இறப்பு எண்ணிக்கையும் 2 சதம் வரை உயர்ந்தது.
தமிழகத்தில் பரவிய கரோனாத் தொற்று தென்மாவட்டங்களில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிகரித்தது. இதனைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடாகக் கடுமையான லாக்டவுண் அறிவிக்கப்பட்டும், மக்கள் முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. லாக்டவுண் காலத்தில் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்தது மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தென்மாவட்டத்தில் அன்றாடம் சராசரி 180 வரை சென்ற கரோனா பாதிப்பு நாளடைவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறையத் தொடங்கியது.
ஆனாலும் 34 சதவிகிதம் மக்கள் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலிருப்பதைக் கண்ட சுகாதாரத்துறை, அவ்வப்போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பை வலியுறுத்தியது.

அண்மையில் கரோனாத் தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் 6,5,7 என்று அன்றாடத் தொற்று இருந்த நேரத்தில், தற்போது சற்று உயரத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருவதால் மக்கள் மாஸ்க், அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதைக் கூட மக்கள் பின் பற்றியதாகத் தெரியவில்லை. ஏனெனில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பின்பு கரோனா 2 ஆம் அலை உருவெடுத்ததை அறிந்த சுகாதாரத் துறை, வரும் தீபாவளிப் பண்டிகையின் போது மக்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் இரண்டாம் கட்ட அலை உருவாகிவிடும் மறுபடியும் லாக்டவுண் முடக்கம் என்று எச்சரித்தனர்.
இது குறித்து தென்காசி மாவட்டத்தின் சுகாதாரத்துறை இணை இயக்குனரான சிவலிங்கம் கூறுவதோ, "கரோனாவைக் கட்டுப்படுத்த ரெம்டெசிவர், ஆண்டிபயாடிக் சிகிச்சையும் மேற்கொள்கிறோம். மாஸ்க் அணியாமல் சென்றவர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பலர் அதைப் பின்பற்றவில்லை. இரண்டாம் அலை உருவாகிவிடக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியவர் தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒருவாரம் கழிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மாஸ்க் அணிந்து கவனமாக இருந்தால் தடுக்கமுடியும். அதன் பிறகு தான் பரவல் நிலைமைகள் பற்றித் தெரியவரும் என்றார்.