
கடந்த காலங்களில் கடுக்காய் கொடுத்து வந்த வடகிழக்குப் பருவமழை இந்த வருடம் கடந்த அக்டோபர் நவம் டிசம்பர் வரை தொடர் கனமழையாகப் பெய்தது. குறிப்பாக சென்னையில் திரும்புமிடமெல்லாம் வெள்ளம். கிட்டத்தட்ட சென்னை வாழ் மக்களை வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்குமளவுக்குச் செய்திருக்கிறது இந்த வருட பருவமழை. வடமாவட்டங்களில் நிலவரம் இப்படி என்றால் தென்மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டச் சேதங்களைப் பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரணப் பணிகளை விரைவு படுத்தினார். நெல்லையில், பெய்த அடை மழைகாரணமாக மணிமுத்தாறு பாபநாசம் சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியது மட்டுமல்ல தென்காசி மாவட்டத்தின் குண்டாறு கடனாநதி, ராமநாதி, அடவிநயினார் போன்ற அனைகள் நிரம்பியதோடு தென் மாவட்ட அணைகளின் உபரிநீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வானம் பார்த்த பூமியான நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் இந்த வருடம் பரவலான மழை பெய்ததுடன் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. பணகுடிப் பக்கமுள்ள கிராமப்புறங்களில் காட்டாற்று வெள்ளம் பாலத்தையும் தாண்டி அரிப்பெடுத்துப் பாய்ந்ததால் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாயினர். ஆபத்தான இந்தக் காட்டற்று வெள்ளத்தை இளைஞர்களின் உதவியோடு கடந்து சென்று கிராம மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறார் பேரவைத் தலைவரான அப்பாவு. மேலும் ராதாபுரம் பக்கமுள்ள ஆத்தங்கரைப் பள்ளிவாசல் திசையன்விளைச் சாலை துண்டிக்குமளவுக்கு வெள்ள நிலைமை போயிருக்கிறது. இதனிடையே தமிழக மழை பொழிவு அளவீட்டைக் கணக்கிட்ட வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட அதிக அளவு செய்திருக்கிறது என்ற அளவீடு கணக்கையும் வெளியிட்டது.
தென்காசி மாவட்டத்தின் வான் மழையை நம்பியுள்ள சங்கரன்கோவில் பகுதிகளிலும் மழை குறைவைக்கவில்லை. தென் மாவட்டங்களில் விவசாயப் பணிகள் வேகமெடுக்கின்றன.
இது குறித்து சங்கரன்கோவில் வேல்சாமி, ''போன நாலு வருஷமா மழை யில்ல. இந்த வருஷம் எதிர்பாக்காத நல்ல மழை. பருத்தி சோளம், மக்காச்சோளம் போட்டிருக்கேன். அதிகப்படியா தண்ணி வந்த மழையால பூச்சிகளால தொல்லை பயிர் சேதமாவுது'' என்றார்.
வடக்குப்புதூரின் செந்தூர்பாண்டியோ ''முன்னாலல்லாம் இந்தப் பகுதியில் 400 அடி போர் போட்டாத்தான் தண்ணி வரும் இப்ப மழையால நிலத்தடி நீர் மட்டம் ஏறிடுச்சி 100 அடி போட்டாலே தண்ணி வந்திருது. குளங்களும் நிரம்பியிருக்கு. வெல கெடைக்காம வெங்காயத்த பதப்படுத்தி ஸ்டாக் வைச்சிருந்தேன். அடை மழையினால, பாதி வெங்காயம் அழுகி நட்ட மாயிறுச்சி'' என்கிறார்.
வடக்குப்புதூரின் அய்யாத்துரை, ''சீதோஷ்ணம் இயற்கை மாற்றம் போலதெரியுது. அதனால தான் வானம் பார்த்த பூமியான இங்க யிப்ப நல்லமழை. நெல்பயிர் போட்டேம். மழைத் தண்ணி தேங்குனதால பயிர்க அழுகிறுச்சி. முன்னல்லாம் இப்படி கெடையாது'' என்கிறார்.
திருவேங்கடம் தாலுகாவின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம், ''ஏற்கனவே வறட்சியான இது கரிசல் பூமி. கால நிலை மாற்றம் போல இந்த வருஷம் நல்ல மழை. அதனால ஏரியா பொறுத்து இந்தத் தாலுகாவுல சுமார் 22 ஆயிரம் ஏக்கர் இந்த வருஷம் மக்காச்சோளம் பயிர் போட்டிருக்கோம்'' என்கிறார்.
