ADVERTISEMENT

ஆடல், பாடலை ரத்து செய்து நீர்நிலைகளை சீரமைக்கும் கிராம மக்களுக்கு 532 மாணவர்கள் கையெழுத்து போட்டு அனுப்பிய பாராட்டு சான்று

01:34 PM Aug 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கொத்தமங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நிலத்தடி நீரை பாதுகாக்க மழை நீரை சேமிக்க பல வருடங்களாக மராமத்துச் செய்யப்படாமல் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் இளைஞர்கள் களமிறங்கி உள்ளனர். சொந்த செலவில் பணிகளை தொடங்கினாலும் நன்கொடைகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள நாடியம் கிராமத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கிராம மக்கள் கூடி முக்கிய தீர்மானங்களை எடுத்தனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் இப்படி கிராம மக்கள் கூடுவது வழக்கம். அப்படி கூடும் போது மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கூடிய கூட்டம் அதற்கு நேர் மாறாக அமைந்தது. அதாவது.. 3 ஆண்டுகளுக்கு ஆடல் பாடல்களை ரத்து செய்வோம்.. அந்தப் பணத்தில் நீர்நிலைகளை உயர்த்துவோம்.. என்று இளைஞர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

நாடியம் கிராமத்தின் இந்த முக்கிய தீர்மானம் பற்றிய தகவல்களை நக்கீரன் இணையத்தில் முதலில் படங்களுடன் செய்தி வெளியானது. அந்த செய்தியின் தாக்கம். பல ஊடகங்களிலும் செய்திகளானது. தொடர்ந்து பல கிராமங்களிலும் இந்த தீர்மானத்தை வரவேற்றனர்.

இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியர் தேவதாஜ், மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் செய்தியை பார்த்த பின் நாடியம் கிராம மக்களை பாராட்டி ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள 532 மாணவ, மாணவிகள் கையெழுத்து போட்டு கிராம மக்களின் இந்த முடிவுகளை வரவேற்கிறோம் என்று பாராட்டு சான்றை நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பி கிராம மக்களிடம் ஒப்படைக்க கூறியுள்ளனர். நாடியம் பள்ளி நிர்வாகம் கிராமத்தில் ஒப்படைத்துள்ளனர்.


இது குறித்து.. கோவிந்த் நீலகண்டன் கூறும் போது.. நாடியம் கிராமத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதை பல கிராமங்களிலும் உள்ளவர்கள் வரவேற்றார்கள். ஆனாலும் சிலர் கிராமிய கலைஞர்களின் வருமானத்தை கெடுக்கனுமா என்றனர். நாங்கள் கிராமிய கலைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆடல் பாடல் என்ற பெயரில் நடக்கும் ஆபாச ஆட்டத்தை எதிர்ப்பவர்கள் தான். அதிலும் தற்போது கிராம வளர்ச்சிக்காக 3 வருடங்கள் எங்களின் கேளிக்கைகளை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றோம்.


அந்த செய்தி பல தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படித் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலநாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள், 532 மாணவ, மாணவிகளுக்கு எங்கள் கிராம முடிவை பாராட்ட நினைத்து கைழுத்து போட்ட பாராட்டு சான்று அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை எண்ணி எங்களை பாராட்டி அனுப்பிய சான்றால் உற்சாகமடைந்திருக்கிறோம். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றி நீர்நிலைகளை உயர்த்தினால் மீண்டும் நாம் பழைய விவசாயத்தை மீட்க முடியும், பழையபடி கிணறுகளில் நஞ்சில்லாத தண்ணீரை எடுத்துக் குடிக்க முடியும் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT