ADVERTISEMENT

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

10:58 PM Jun 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று (ஜூன் 21, 2019) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT


பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை ஜூன் 21 (இன்று) முதல் வரும் 28ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது.


ஜூலை 9ம் தேதியன்று காலை, நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.


ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது.


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 11ம் தேதி காலையிலும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.


வருவாய் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெற விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 11ம் தேதி மாலையில் கலந்தாய்வு நடக்கிறது.


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 12ம் தேதி காலையிலும், அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அன்று மாலையிலும் நடைபெறுகிறது.


ஒன்றியத்திற்குள்ளான பணி நிரவல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 13ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே நாளில் மாலையிலும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


அதேபோல் ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு அன்று மாலையிலும் நடக்கிறது.


மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 15ம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே நாளில் மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது.


யார் யாருக்கு முன்னுரிமை?:


ஒரே இடத்திற்கு பலர் விண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, மாறுதல் அளிக்கலாம். அவையாவன...


1. முற்றிலும் கண்பார்வையற்ற அனைத்து வகை ஆசிரியர்கள்


2. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்


3. 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்


4. மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகளின் சட்ட ரீதியான பாதுகாவலர் ஆசிரியர்களாக இருப்பவர்கள்.


5. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள்.


6. இருதய அறுவை சிகிச்சை, மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள்.


7. கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்.


8. ஜூன் 1, 2019ம் தேதி நிலவரப்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.


9. விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாத முதிர் கன்னியர்கள்.


10. ஜூன் 1, 2019ம் தேதிப்படி, 5 ஆண்டுகளுக்குக் கீழ் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.


11. கணவன் / மனைவி பணிபுரிபவர்கள் கணவர் பணியாற்றும் இடத்தில் இருந்து மனைவி பணியாற்றும் இடமும் அல்லது மனைவி பணியாற்றும் இடத்தில் இருந்து கணவர் பணியாற்றும் இடமும் 30 கி.மீ. சுற்றளவுக்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை தனித்தனியாக வசிப்பதாகக் கருதி, கணவன் / மனைவி பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படலாம்.


12. ஒரே இடத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள், அதற்கு மேலும் பணியாற்றிய ஆசிரியர்கள்.


இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT