Skip to main content

“கடிதம் கிடைக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்” - பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 private school teacher lost their life  jumping in front of a train

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த லாகாபுரம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (53). இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சங்கர் கொங்கணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சங்கர் கரட்டாங்காடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று அங்கு இரவில் தங்கினார். அப்போது சங்கர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

 

இந்த நிலையில், இன்று காலை வெளியே சென்று வருவதாகத் தாயிடம் கூறிவிட்டு சங்கர் சென்றார். வெளியே சென்ற சங்கர் நேராக அந்தப் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சங்கர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சங்கர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சங்கர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில், “இந்த கடிதம் கிடைக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனக்கு கடன் தொல்லை அதிகம் உள்ளது. அதனால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை. நான் விருப்பப்பட்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இப்படிக்கு சங்கர்” என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்