ADVERTISEMENT

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸால் தமிழக தொழிலாளர்கள் அச்சம்

10:48 AM May 22, 2018 | Anonymous (not verified)


கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸால் அங்குள்ள தமிழக தொழிலாளிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கியுள்ள மாவட்டங்களில் இருந்து வெளியே செல்பவர்களும் அதேபோல் மாவட்டத்திற்குள் வருபவர்களும் அவர்களாகவே அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென்று கேரளா சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சர் கேட்டுள்ளார்.

கேரளாவை தற்போது அச்சுறுத்தி வரும் நிபா எனும் வைரஸ் நோய் தலைகீழாக தொங்கும் பாலூட்டி இனத்தை சோ்ந்த வௌவாலில் இருந்து பரவி வருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 11 போ் உயரிழந்துள்ளனர்.

கேரளாவின் எல்லை மாவட்டங்களான கோழிக்கோட்டில் மூஸாக் மற்றும் அவருடைய மகன் முகம்மது ஸாலிஹ் இருவரையும் இந்த நோய் தாக்கியிருப்பது முதலில் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதில் அந்த இரண்டு பேரும் உயிரிழந்தனா். பின்னா் அவர்களுக்கு சிகிட்சையளித்த நர்ஸ் லினியும் இந்த நோயால் தாக்கப்பட்டு உயரிழந்தார். அதன் பிறகு மலப்புரத்தில் 7 பேரும் காசர் கோட்டில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இந்த மூன்று மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் மேலும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நோய் தாக்கியவா்களுக்கு தலைவலி, காய்ச்சல், மயக்கம், அடுத்து கோமா என மரணம் வரை கொண்டு போய்விடும்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்று ஏராளமான கூலித் தொழிலாளர்கள் கட்டிட பணிகள் மற்றும் இரும்பு பீரோ செய்யும் பணிகள் செய்து வருகின்றனர். இதனால் நிபா வைரஸ் தங்களையும் தாக்குமோ என்ற அச்சத்தில் தமிழக தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் இந்த நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாநில சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துக்கு விதித்துள்ளது. கடிப்பட்ட பழங்களை வியாபாரிகள் யாரும் விற்கக் கூடாது என்றும் அந்த பழங்ளை வௌவால் கடித்து இருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதே போல் கேரளா கா்நாடகா எல்லையிலும் நிபா வைரஸை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சைலஜா டீச்சர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT