ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

03:32 PM Jul 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (24-7-2023) நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்கள் 9 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 9 பேரையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு, தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தேன். இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவிற்கு இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விவாதிக்க வலியுறுத்தி இருந்தேன். மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் எனத் தாம் நம்பினேன். இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது 2 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவுகளைச் சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கடுமையான சமூக - பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளைப் பாதுகாப்பாகத் திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொள்கிறேன். பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT