Tamil Nadu CM Mk Stalin letter to the Union Minister

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது ஐந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (16.10.2023) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி (14.10.2023) 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நான் ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.