Skip to main content

“சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- முதல்வர்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Action should be taken to release the fishermen immediately says CM

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM- 985, IND -TN-10-MM-915, IND-TN-10-MM-717, IND-TN-10-MM-917 மற்றும் IND- TN-10-MM-972 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் 28-10-2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

 

இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்கிறது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்