Skip to main content

கல்வி புரட்சிக்கு வித்திட்ட சுவாமி சகஜானந்தா... கோரிக்கை வைக்கும் நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர்கள்

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

education

 

சுவாமி சகஜானந்தா ஏழை அடிதட்டுமக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அதன் சுற்றுவட்ட பகுதியில் திண்ணை பள்ளிகளை ஆரம்பித்து ஏழைமக்களுக்குக் கல்வியை கற்பித்து சமூக மாற்றத்திற்கு போராடிய இவர் ஆரணியை அடுத்துள்ள மேல்புதுப்பாக்கத்தில் பட்டியல் சமூகத்தில் 1890 ஜன 27-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் முனுசாமி. சிறுவயதிலிருந்தே ஆண்மீக பற்றுள்ள இவர் .குடும்ப வறுமையால் 8-ம் வகுப்புவரை கல்வி பயின்றார்.

 

பின்னர் கர்நாடக கோலார் தங்கசுரங்கத்தில் ‘பெற்றோர்களுடன் வேலை செய்துகொண்டு ஆன்மீக பற்று காரணமாக இவர் மாலை நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு கேட்கக் கோவிலுக்குச் செல்லும் போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வியாசர்பாடியில் கரபாத்திரசுவாமிக்கு சீடராகப் பணியாற்றிய இவர் கடந்த 1910-ஆம் ஆண்டு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்காகச் சிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவர் சிதம்பரம் பகுதியில் சமூக நலன் மற்றும் ஆன்மீக சிந்தனையில் சிறப்பாகப் பணியாற்றியதால் அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவியுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து கல்வியறிவே என்னவென்று தெரியாத சிதம்பரத்தை சுற்றியுள்ள கிள்ளை, நஞ்சமகத்துவாழ்க்கை, கொடிப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணை பள்ளிகளைத் தொடங்கி அப்பகுதி மக்களிடம் யாசகம் பெற்று கல்வி கற்பிக்க வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கிக் கல்வியைக் கற்பித்து வந்துள்ளார்.

 

பின்னர் 1916-ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே ஆதிதிராவிடர் சமூக நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் ஓமக்குளத்தில் தொடக்க பள்ளியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு நந்தனார் பெயரில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. பின்னர் பெண்களுக்கு என மேல்நிலைப்பள்ளி, தனித்தனி விடுதி வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழிற்கல்வி கூடமும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்ந்த இந்த இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த  பல்வேறு அரசியல் தலைவர்கள், பல லட்சம் பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள். பள்ளியின் சிறப்பை அறிந்த காந்தி, காமராஜர், நேரு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வருகை தந்து பள்ளியின் கல்வி தரம் குறித்தும் ஒழுக்க நெறிகள் குறித்து பாராட்டியுள்ளனர். தற்போது இந்தக் கல்வி நிறுவனங்கள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 

சகஜானந்தா கல்வி மற்றும் ஆன்மீக சேவையுடன் பொதுவாழ்கையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அதன் பேரில் 34 ஆண்டுகள் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றி அனைத்து சமூக மக்களின் நன்மதிப்பை பெற்றார். தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் சட்டப்பேரவையில் அவர்களின் குரலை ஒலிக்கச் செய்து பெற்றுத் தந்துள்ளார். இவரின் செயல்பாட்டால் சட்டமன்ற தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழகத்தில் தமிழ் புலவர்களில் 8-வது புலவராகவும், சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

 

இவரது அயராத முனைப்பாலும், பல போராட்டங்களாலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு மே 1ம் தேதி 69-வது வயதில் மறைந்தார்.

 

அடிதட்டு ஏழை மக்களிடம் கல்வி புரட்சியை ஏற்படுத்திய சுவாமி சகஜானந்தாவை வரும் தலைமுறைகள் மறந்துவிட கூடாது அவரது பணிகள் குறித்து அனைவரும் அறியும் வகையில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் அவரது சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். என்று கடந்த 2011-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கே. பாலகிருஷ்ணன் (தற்போது சிபிஎம் மாநில செயலாளர்) சகஜானந்தா பணிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார். பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அவரின் கல்வி பணிகள், ஆன்மிகம், தமிழ்வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து நேரில் விளக்கிகூறி கடிதமும் வழங்கினார். இதனை ஆய்வில் எடுத்துக் கொண்ட ஜெயலலிதா சகஜானந்தாவின் அரும்பணிகளை போற்றும் வகையில் ரூ125 லட்சம் செலவில் அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு மணிமண்டபம் அமைக்கப்பட்டு தற்போது அவர் பிறந்த ஜன 27-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதனை அனைத்து சமூக மக்கள் வரவேற்றுள்ளனர்.  கல்வி புரட்சி ஏற்படுத்திச் சமூக மாற்றத்திற்கு போராடிய சுவாமி சகஜானந்தா மறைந்த தினமான மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தில் அவரின் 63-வது ஆண்டு நினைவை அனைவரும் போற்றுவோம்.

 

அதேநேரத்தில் மணிமண்டப வளாகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ரங்கராஜன் தொகுதி வளர்ச்சி நிதி ரூ 24 லட்சத்தில் மாணவர்களுக்கு அரசு தேர்விற்கான பயிற்சி மையம், தமிழக அரசின் பொது நிதி ரூ 24 லட்சத்தில் நவீன நூலகம் கட்டப்பட்டு ஒரு ஆண்டாகக் கிடப்பில் உள்ளது. அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற தந்தையாகச் செயல்பட்ட சகஜானந்தாவின் படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நந்தனார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சகஜானந்தா மீது பற்றுள்ளவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.