ADVERTISEMENT

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்.. மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்!!

07:38 PM Jan 28, 2019 | bagathsingh

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் தெற்கு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் சுமார் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களும் சத்துணவும் சாப்பிட்டு படிக்கின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனமும் இல்லை என்பதால் தொடர்ந்து பள்ளி செயல்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் திங்கள் கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி திறக்கப்படாததால் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலைக்கு சென்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலிசார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது.. ஆசிரியர்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றனர்.

அதே நேரத்தில் பனங்குளம் வடக்கு, குளமங்கலம் வடக்கு, நகரம், கீரமங்கலம் மேற்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் அந்தந்த பகுதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணையுடன் உள்ளூர் இளைஞர்கள் பள்ளிகளை திறந்து பாடம் நடத்தினார்கள். மறமடக்கி கிராமத்தில் பள்ளியை திறக்க முடியாததால் வராண்டாவில் தன்னார்வ ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு உள்ளூர் இளைஞர்கள் மதிய உணவும் வழங்கினார்கள். செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் பள்ளிக்கு வர ஆசிரியர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT