ADVERTISEMENT

புயல் அடிச்சு ஒரு வருசமாச்சு... மின்சாரமின்றி இருளில் தவிக்கும் கிராமம்;அலட்சியத்தில் அதிகாரிகள்!

06:27 PM Oct 20, 2019 | kalaimohan

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி அதிகாலை கடுமையாக தாக்கிய கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் நிலைகுலைந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளை காணவில்லை. தென்னை, மா, பலா, வாழை, தேக்கு என கோடிக்கணக்காண மரங்களும் சாய்ந்தது. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்தது. பலர் உயிரிழந்தார்கள்.

ஒரு நாள் அந்த துயரத்தில் இருந்தார்கள் அடுத்த நாள் அரசாங்கம், அதிகாரிகள் வரவில்லை. அந்தந்த கிராம இளைஞர்களே களமிறங்கினார்கள். தங்கள் கிராமத்தை தாங்களே சீரமைத்தனர். மரங்களை வெட்டி அகற்றி பாதைகளை அமைத்தார்கள். ஊருக்கு ஊர் சோறு சமைத்து கொடுத்தார்கள். குடிக்க தண்ணீருக்காக ஜெனரேட்டர் வசதி செய்தனர். டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்கள். தன்னார்வலர்களும் கை கொடுத்தார்கள். அரசு சில மாதங்களுக்கு பிறகு நிவாரணப் பொருள் கொடுத்தது. அதிலும் பாதிப்பேருக்கு இல்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இருண்டு கிடந்த கிராமங்களை இருளில் இருந்து மீட்க இளைஞர்களும், கிராமத்தினரும் தங்கள் சொந்த செலவில் மின் கம்பங்களை எடுத்துச் சென்றனா். பொக்கலின் உதவியுடன் தூக்கி நட்டனர். மின்கம்பிகளை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் துணையோடு இளைஞர்களே இழுத்துக் கட்டினார்கள். இப்படியே சில மாதங்களுக்கு பிறகே மின்சாரம் கிராமங்களுக்கள் வந்து சேர்ந்தது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை மக்கள். ஒரு வருடம் உருண்டுவிட்டது. ஆனால் ஒரு கிராமத்தில் இன்னும் மின்சாரம் இல்லாமல் பல வீடுகள் இருளில் தவிக்கிறது என்பது தான் வேதனையிலும் வேதனை.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ளது ஒக்கநாடு மேலையூர் கிராமம். இந்த கிராமத்திலும் புயல் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் ஒடிந்தது. உடனே கிராமத்தினரும், இளைஞா்களும் அவற்றை அகற்றினார்கள். மின் கம்பங்களையும் சொந்த செலவில் கொண்டு வந்தார்கள். ஆனால் மின் இணைப்புகள் கொடுக்கவில்லை. பல நாள் போராட்டத்திற்கு பிறகு கிராமத்திற்கு மின் இணைப்புகள் கிடைத்தது. ஆனால் யாதவர் தெருவில் உள்ள பல வீடுகளுக்கு தான் இன்னும் மின் இணைப்பு இல்லை.

எத்தனையோ போராட்டங்கள் எதற்கும் அசையவில்லை அதிகாரிகள். 18 ந் தேதி மின்சாரம் கொடுக்க வந்த அதிகாரிகள் பாதியில் திரும்பி போனார்கள். அதனால் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கிராம மக்கள். எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் வரும் வரை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கிறோம் என்று அமர்ந்து விட்டனர். அதன் பிறகு ஓடி வந்த ஒரு சில அதிகாரிகள் விரைவில் மின்சாரம் கொடுக்கிறோம் என்று சொன்னதோடு சரி. அங்கிருந்து மக்கள் சென்றதும் பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டனர்.

ஏன் இந்த தெருவுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கல என்றபோது கிராம மக்கள் சிலர்.. 2016 ல அக்னி ஆற்றில் உள்ள கண்ணன் ஆறு மராமத்து செய்ய ரூ. 4 லட்சம் ஒதுக்கினாங்க. வேலை செய்ய வந்தவங்க 100 மீட்டர் வெட்டிட்டு இயந்திரங்களை கரை ஏற்றினாங்க. முழுசா வெட்டிட்டு இயந்திரங்களை எடுங்கன்னு விவசாயிகள் மறிச்சோம். மழை தொடங்கிருச்சு மழை முடிஞ்சதும் வெட்டிக் கொடுக்கிறோம்னு அப்போதைய பொறியாளர்கள் கனிமொழியும், மின்னல்கொடியும் உத்தரவாதம் கொடுத்து இயந்திரத்தை மீட்டு கொண்டு போனாங்க. அதன் பிறகு வரவே இல்லை. ஒப்பந்தக்காரர் எல்லா பணத்தையும் தேர்தல் செலவு செஞ்சாச்சு இனி வெட்ட முடியாதுனு சொல்லிட்டார். அதனால நாங்க போராடி 2017 ல அதிகாரிகள் வந்து வெட்டி கொடுத்தாங்க.

அப்பறம் 2018 ல அதே இடத்தில் குடிமராமத்து செய்ய ரூ. 14 லட்சம் ஒதுக்கினாங்க. அந்த பணிகள் பாசனதாரர் சங்கம் தான் செய்யனும் அதுபடி விவசாயிகள் இணைந்து சங்கம் அமைத்து வேலையை நாங்க செய்றோம்னு கேட்டோம் இப்ப வரை அந்த வேலை நிலுவையில இருக்கு. இப்படி வேலைகளை சரியா செய்ய சொல்றதால எங்க பகுதிக்கு மின்சாரம் கொடுக்காம எங்களை இருட்டுல போட்டு வச்சிருக்காங்க. பல முறை மின்வாரியம், வட்டாட்சியர், ஆட்சியர்னு போய் பார்த்தாச்சு. ஒரு தனி நபர் ரோடு என் இடத்தில் இருக்குனு தடுக்கிறார்னு பதில் சொன்னாங்க. அப்பறம் அதையும் அதிகாரிகளே அளவீடு செய்து ரோடு ஊராட்சிக்கு சொந்தமானதுனு கண்டுபிடிச்சு ஒப்படைச்ச பிறகும் அதில் மின்கம்பம் நட்ட பிறகும் கம்பி இழுக்கல. மின்வாரிய அலுவலர்கள் நாங்க வரத் தயார் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலனு சொல்றாங்க.


தாசில்தார் நான் இடத்தை அளந்து கொடுத்துட்டேனு சொல்றார். 18 ந் தேதி மறுபடியும் கம்பி இழுக்க வந்தாங்க. பழையபடி ஒருவர் தடுக்கிறார்னு சொல்லிட்டு பேசாம போயிட்டாங்க. அதன் பிறகு தான் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பிறகும் பலனில்லை என்றனர் வருத்தமாக.

மேலும் எங்க ஊர் பிரச்சனை சம்மந்தமாக பி.ஆர்.பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ஆனால் மேலே இருந்து அழுத்தம் கொடுக்குறதா சொல்றாங்களாம். எங்க ஊருக்கு ஒரு தெருவுக்கு மின்சாரம் கொடுக்க கூடாதுனு தடுக்கிற சக்தி யார்னு தெரியனும். இன்னும் சில நாட்கள் பார்ப்போம். அப்பறம் மழை காலம் தொடங்கியதால் பாம்பு, பூச்சி வரத் தொடங்கிருச்சு. அதனால் தஞ்சாவூர்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளோட குடும்பம் குடும்பமா குடியேறப் போறோம். எங்க ஊருக்கு மின்சாரம் வந்த பிறகு அங்கிருந்து வெளியேறுவோம் என்றனர்.

புயல் தாக்கி ஒரு வருடமாக இருளில் தவிக்கும் கிராமத்திற்கு எப்போது தான் வெளிச்சம் பிறக்குமோ? தமிழக அரசு அலட்சியத்தால் கிராமமும் இருளில் தவிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT