Skip to main content

8 வருட தனிமை; மனைவிக்கு சிலை வைத்த கணவர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

sivakasi old man wife memory statue viral video 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவரது மனைவி ஈஸ்வரி. இத்தம்பதியருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி இறந்துவிட்டார். மேலும் மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நாராயணன் தனது மனைவி ஈஸ்வரி இறந்ததில் இருந்து தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் பிரிவையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு ஈஸ்வரியின் நினைவாக வெண்கல சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இருப்பினும் மனைவியின் முழு உருவ சிலையை வீட்டில் நிறுவும் முயற்சியில் இருந்து வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து தனது மனைவியின் முழு உருவ சிலிகான் சிலையை வடிவமைக்க பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தார். அந்த நிறுவனமானது சிலையை தத்ரூபமாக 9  லட்ச ரூபாய் செலவில் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரியின் நினைவு நாளான நேற்று (25.05.2023) அவரது வீட்டில்  சிலையை வைத்து நாராயணன் தனது மகன்கள் மற்றும் மகள்கள் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.