Skip to main content

“இனிமேல் பி.ஜே.பி என்று அழைக்க வேண்டாம் – சி.ஜே.பி என்று அழையுங்கள்!”-மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

 

இன்று (29-03-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரையும், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார். அதன் முழு விவரம் பின்வருமாறு:

 

s

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய, இந்த மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கிறேன். வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலோடு சேர்த்து மானாமதுரை சட்டமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

 

அந்தத் தேர்தல்களில் நீங்கள் எல்லோரும் சிறப்பான வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டுமென்கிற என்ற உணர்வோடு சிவகங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமைப்படுகின்றேன், பூரிப்படைகின்றேன், புளங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.

 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில், 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது, அந்த அடிப்படையில் மானாமதுரை தொகுதியில் நம்முடைய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அதேசமயம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய இலக்கியதாசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். உங்களைத் தேடி ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன். என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத காரணத்தினால் நான் உங்களை நாடி தேடி வந்து இருக்கின்றேன்.

 

s

 

“மானம் காத்த மருது பாண்டியர்கள் மண்ணிற்கு” நான் வந்திருக்கின்றேன். சிவகங்கைச் சீமைக்கு வந்திருக்கின்றேன். மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்ற, இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். வருகின்ற 18ம் தேதி மத்தியில், மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச பா.ஜ.க அரசை அகற்றப்படக்கூடிய தேர்தல்தான் நாடாளுமன்ற தேர்தல். அதையொட்டி, தமிழகத்தில் 18 இடங்களில் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றது. அதனடிப்படையில், மானாமதுரையில் நடைபெற இருக்கக்கூடிய இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய எடுபிடியாக, பல அக்கிரமங்கள் அநியாயங்களை, கரெப்சன் - கலெக்சன் - கமிசன் என்ற நோக்கத்தோடு எடப்பாடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சியையும் அப்புறப்படுத்தியாக வேண்டும்.

 

நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிடக்கூடிய கார்த்திக் சிதம்பரம் அவர்களை நான் உங்களுக்கு அதிகப்படியாக விளம்பரப்படுத்த தேவையில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை". எனவே அதைப் போல் அவரைப் பற்றி அறிந்தவர்கள், புரிந்தவர்கள் நீங்கள்.

 

நம்முடைய மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களின் மகன் என்று நாம் சொல்லலாம். ஆனால், சிலர் வாரிசு அரசியல் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் அவர் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

 

நீங்கள் வேறொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் புரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரை தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.

 

நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

 

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா அவர்கள்.

 

நான் கேட்க விரும்புவது, இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.

 

அதனால்தான் நான் துவக்கத்திலேயே சொன்னேன். மானம் காத்த மருது பாண்டியர் வாரிசுகளாக சிவகங்கை மக்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள் என்று, அதை நீங்கள் உணர்ந்து பார்த்திட வேண்டும். அதற்காகத்தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய, சகோதரர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த வேண்டும். தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுகின்ற, ஏன், தந்தை பெரியாரின் சிலைகள் அனைத்தையும் உடைப்பேன் என்று சொல்லுகின்ற, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நம்முடைய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற எச்.ராஜாவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நீங்கள் புகட்டிட வேண்டும். புகட்டிட நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

 

s

 

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்னதையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன். இந்த நேரத்தில் இது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன், சுப்பிரமணிய சாமி யார் என்பதும் உங்களுக்கு தெரியும், அவரும் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர் தான். நம்மைக் கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது, அவரும் எல்லோரையும் விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர் தான். ஏதேனும் ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்னால், அவர் சொன்ன கருத்திற்கும், பி.ஜே.பி-க்கும் சம்பந்தம் இல்லை என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம் வாடிக்கை. அந்த நிலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி விட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே? மோடிக்கும் அருண்ஜெட்லி க்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. சில நாட்களுக்கு முன்பு சு.சுவாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர் பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொருளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணிய சுவாமி சொல்லுகின்றார்.

 

சில நாட்களுக்கு முன்னால் ஆங்கில நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை இந்து தமிழ் நாளேட்டில் கடந்த 27-11-2018 அன்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிடுகின்றார் என்று சொன்னால், இந்திய பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது, ஜிடிபி அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது, அரசு வங்கிகளில் வாராக் கடன் அளவு வளர்ந்துவிட்டது. என்று சுப்பிரமணிய சுவாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கின்றார்.

 

அதைத்தொடர்ந்து இன்னொரு கருத்தையும் சொல்லுகின்றார். மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72 இலட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014ஆம் ஆண்டைவிட குறைவானது என்று சுப்பிரமணிய சுவாமி ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார சீரழிவிற்கு சுப்பிரமணிய சுவாமி கொடுத்திருக்கக்கூடிய சாட்சியங்கள்.

 

அப்படியானால் இந்த ஐந்து வருடத்தில் அவர் என்ன செய்தார்? அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா? விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய நாடு இந்தியா. அதை நம்பித்தான் 60 சதவிகிதத்திற்கு மேல் விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

எனவே, அந்த உணர்வோடு தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஐந்து முறை இருந்தபொழுது, எத்தனையோ எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளை திட்டங்களை அவர் செய்திருக்கின்றார், அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயப் பெருங்குடி மக்களுக்கு என்ன என்ன செய்தார் என்பதை என்னால் வரிசையாகப் பட்டியல் போட முடியும். ஆனால், நீங்கள் கொடுமையான வெயிலை தாங்கிக் கொண்டு இருப்பதால் சிலவற்றை மட்டும் சுருக்கமாக சொல்லுகிறேன்.

 

அதேசமயம் இந்த ஆட்சியின் கொடுமைகளை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய நீங்கள் இந்த வெயிலின் கொடுமையை பெரிதாக பொருட்படுத்த மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததற்குப்பிறகு, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக "இலவச மின்சாரக் கட்டணத்தை" அறிவித்து நிறைவேற்றிக் காட்டினார். அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 7,000 கோடி ரூபாய் கடனை கட்சி பாகுபாடின்றி முழுமையாக ரத்து செய்து கையொப்பமிட்டார்.

 

நமது வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு மத்தியில் டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நேரத்தில் நிதி அமைச்சராக மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்கள் தான் பொறுப்பு ஏற்று இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தார்கள். அப்பொழுது இந்தியா முழுவதும் இருந்த விவசாயிகளின் கடன் 60,000 கோடி ரூபாயை ரத்து செய்த ஆட்சிதான், அன்னை சோனியா காந்தி தலைமையில் டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பதை நீங்கள் மறந்துவிட, மறுத்துவிட முடியாது.

 

அதைத்தான், நாம் இப்பொழுதும் நம்முடைய தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு, மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், உடனே ஒரு செய்தியை வெளியிட்டார். என்னவென்றால் விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது ஏமாற்றுகின்றார்கள் என்று தவறான தகவலை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக தான் நம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் இங்கு பேசியிருக்கின்றார்.

 

மத்திய பிரதேசத்தில் அண்மையில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்று இருக்கின்றது, ராஜஸ்தான் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பொறுப்பேற்று இருக்கின்றது. அதற்கு முன்பு அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் பத்தே நாட்களில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று சொன்னார். நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன், பத்து நாட்கள் அல்ல ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் விவசாய கடன்கள் அத்துணையும் அந்த மூன்று மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டது. இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் கேட்டால் கடன்களை தள்ளுபடி செய்வார். கேட்டால் மட்டுமல்ல கேட்காமலேயே தள்ளுபடி செய்வார். எனவே இனிமேல் பி.ஜே.பி-யை பாரதிய ஜனதா கட்சி என்று சொல்லாதீர்கள் அது கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று சொல்லுங்கள்.

 

இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பி.ஜே.பி - அல்ல சி.ஜே.பி.எனவே, மத்தியில் ஒரு சர்வாதிகாரியாக மோடி இருந்துகொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டிருக்கின்றார். மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை, எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. எனது ஆட்சியில் மக்கள் எப்பொழுதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கின்றார். எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாத காரணத்தினால்தான் இன்றைக்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றது.

 

நான் கேட்கின்றேன், ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கின்ற போது நானும் இங்கு இருக்கக்கூடிய திரு ராமசாமி அவர்களும் கவன ஈர்ப்பு கொண்டுவந்து பேசினோம். அருகில் இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தியது தொடர்பாக நாங்கள் விவாதத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அது செய்திகளில் வெளிவந்ததா இல்லையா? அதேநிலை தற்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

என்னவென்றால், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன இரத்தம் செலுத்தியதன் காரணத்தினால் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழ் முதல் பக்கத்தில் வேதனையோடு வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார்? முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா விஜயபாஸ்கர் .

 

குட்கா விஜயபாஸ்கர் தற்பொழுது இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகின்றார். அப்படி வருகின்ற காரணத்தினால் எடப்பாடியிடம் சபதம் செய்து கொண்டு வந்து இருக்கின்றாராம், இந்தத் தொகுதியை நான் வெற்றி பெற வைக்கின்றேன் என்று. இந்த சபதத்தை மருத்துவமனைகளை சீர்படுத்துகிறேன் என்று சொல்லி சபதம் போட வக்கில்லை! சூடு இல்லை! சொரணை இல்லை! மருத்துவமனைகளில் இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் ஏழை எளியவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடியவர்கள் எங்கு செல்வார்கள்?

 

எனவே, இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியில் நிற்கக்கூடிய எச்.ராஜா அவர்களும் அதற்குத் துணையாக விஜயபாஸ்கர் அவர்களும் வோட்டு கேட்கின்ற வருகின்ற பொழுது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது குட்கா ஊழல் உங்களின் கவனத்திற்கு வர வேண்டும் மறந்து விடக்கூடாது.

 

நான் எனது உரையின் துவக்கத்தில் மருது பாண்டியர்களை பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னேன், அவர்களுடைய வீரம் தீரம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதையும் தாண்டிய ஒரு அருங்குணம் அவர்களிடம் இருந்தது. என்ன அந்த அருங்குணம் என்ன என்றால், மத நல்லிணக்கம். இஸ்லாமிய மக்களுக்கு, கிறிஸ்தவ மக்களுக்கு வழிபாட்டு இடங்களை உருவாக்குவதற்கு நிலங்களையும் அதற்குத் தேவையான நிதி உதவிகளையும் செய்தவர்கள். இந்த வட்டாரத்தை பொறுத்தவரையில் நகரத்தார், நாட்டார், நாயக்கர், வேளாளர், ஆதிதிராவிடர், வளையர், மறவர் ஆகிய அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்பவர்களாக இருந்தவர்கள் அவர்கள்.

 

இப்படிப்பட்ட மத நல்லிணக்கமும், சமூக நல்லிணக்கமும் உருவாக காரணமாக இருக்கக்கூடிய இந்த பூமியில் மதவாதிகளாக, மதவெறி பிடித்து இருக்கக்கூடிய சக்திகளை ஓட ஓட விரட்டிட வேண்டாமா? மத்தியில் இருக்கக்கூடிய சர்வாதிகாரியை மாநிலத்தில் இருக்கக்கூடிய உதவாக்கரையை விரட்டிட நாம் சபதம் ஏற்க வேண்டாமா?

 

பிரதமராக மோடி பொறுப்பை ஏற்று 5 வருடங்கள் ஆகி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி அடுத்த தேர்தலில் வரப்போகின்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தற்போது தமிழ்நாட்டிற்கு வருகின்றார். இதற்கு முன்பு பிரதமராகக்கூடிய நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார், நான் எல்லாக்கூட்டங்களிலும் கேட்டிருக்கின்றேன். மானத்தைக்காத்த இந்த சிவகங்கை மண்ணிலிருந்தும் கேட்கின்றேன், பதில் சொல்லுங்கள்.

 

ஆண்டிற்கு 2 கோடி இளைஞர்கள் வீதம் ஐந்து ஆண்டிற்கு 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை நான் உருவாக்கித் தருவேன் என்று சொன்னார், உருவாக்கியிருக்கிறாரா? அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்தை நான் முன்னேற்றுவேன் என்று சொன்னார். இந்தியாவின் பொருளாதாரம் இன்றைக்கு முன்னேறி இருக்கிறதா என்றால் இல்லை, வேளாண்மை விளை பொருட்களை 2 மடங்கு உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டு இருக்கின்றதா? வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப்பணத்தை மீட்டுக் கொண்டுவந்து இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்துவேன் என்று சொன்னார். வழங்கப்பட்டிருக்கின்றதா? அப்படி யாருக்காவது வழங்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் நான் இங்கேயே மன்னிப்புக் கேட்கின்றேன்.

 

வாக்குறுதிகளை வாரி வழங்கினார். வானத்தைக் கிழிப்பேன் வைகுண்டத்தைக் காட்டுவேன் என்றெல்லாம் சொன்னாரே. செய்தாரா?

கருப்பு பணத்தையாவது மீட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களா என்றால் அதுவும் கிடையாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாகி விட்டதா?

 

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோட்டிற்கு வந்து பத்திரிகையாளர்களிடமும் தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுக்கிறார்கள். எந்த ஆட்சியிலாவது இதுபோன்ற ஒரு கொடுமை நடந்து இருக்கின்றதா? அரசியல் சட்டம் அங்கீகாரம் பெற்று இருக்கக்கூடிய தன்னாட்சி அமைப்புகளை கலைத்ததும், சிதைத்ததும் ஜனநாயகமா? என்கின்ற கேள்வி தான் நான் மோடி அவர்களை பார்த்து கேட்கின்றேன்.

 

சமூகநீதி தத்துவத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? என்ற அந்தக் கேள்வி, மதசார்பற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, இந்த ஐந்து வருடத்தில் அதை நிறைவேற்றி தந்திருக்கிறீர்களா? கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றி விடுவேன் என்று சொன்னீர்களே, அதைக் காப்பாற்றி இருக்கிறீர்களா?

நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற தாழ்த்தப்பட்ட மாணவி தற்கொலை செய்து இறந்து போனாரே, அதற்கு இதுவரையில் உங்கள் அரசாங்கம் தீர்வு சொல்லியிருக்கின்றதா?

வணிகர்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஜி.எஸ்/டி வரி அதை அமுல்படுத்த வேண்டிய அவசியம் மோடிக்கு ஏன் ஏற்பட்டது? இதற்கு பிரதமர் மோடி அவர்கள் தயவுகூர்ந்து பதில் சொல்லியாக வேண்டும்.

 

மாற்றுச் சிந்தனை தலைவர்களின் சிலைகள் எல்லாம் உடைப்போம் என்று சொன்னார்களே, தண்டித்திருக்கின்றீர்களா?

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஏதேனும் கருத்துக்களைச் சொன்னால் அவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்று சொல்லுகின்றீர்களே இது அடுக்குமா? மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியேத் தீருவோம் என்று சொல்லித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அந்த இட ஒதுக்கீடு இந்த ஐந்து வருடத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றதா?

 

ஆனால், நம்முடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதிகள் வழங்கியிருக்கின்றார். எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க அல்ல, அடிக்கல் நாட்ட 5 வருடம் ஆகியிருக்கின்றது. இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, உருவாக்கினீர்களா?

சொன்னவாக்குறுதி ஒன்றையும் நிறைவேற்றவில்லை,

நேற்றைய தினம் சூர்யா சேவியர் என்ற நெல்லையைச் சார்ந்த நண்பர் மத்திய மாநில அலங்கோலங்களை பற்றிக் கவிதை நடையில் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். அதை நேற்றைய தினமும் நடந்த பொதுக்கூட்டத்தில் சொன்னேன்.

 

இப்படி எதைப்பற்றியும் அந்த சர்வாதிகாரியும் கவலைப்படவில்லை, இந்த உதவாக்கரையும் கவலைப்படவில்லை. சசிகலாவின் காலில் விழுந்தது மட்டும் போதாதென்று, இப்பொழுது பிரதமர் மோடியின் கையைக் காலாக பற்றிக்கொண்டு இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்.

கடந்த 19ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னென்னப் பணிகளை செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டுத்தான் என்னுடைய தேர்தல் பயணத்தை துவங்கினேன்.  அதில் சில,

·         விவசாயக்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்,

·         மாணவர்கள் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்

·         1 கோடி இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படும்.

·         மக்கள் நலப்பணியாளர்கள் தி.மு.க ஆட்சியில் ஏற்கனவே, நியமிக்கப்பட்ட காரணத்தால், அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் வேலையிலிருந்து நீக்கின்றார்கள். அதன்பின், வழக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது. அதன்பின் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், பணியிழந்தோர், பிச்சையெடுக்கக்கூடிய, மாண்டுபோகக்கூடிய சூழல் உருவானது. அதனால் 50 இலட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

 

·         கிராமப்புற பெண்கள் சிறு தொழில் துவங்க 50,000 ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

·         மத்திய மாநில பணியிடங்கள் உடனடியாக முழுமையாக நிரப்பப்படும்.

·         நீட் தேர்வு முழுமையாக முற்றிலும் ரத்து செய்யப்படும்.

·         அரசு ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்படும்.

·         பெட்ரோல் டீசல் விலையை முறையாக கட்டுப்படுத்துவோம்.

·         சிலிண்டர் விலை பழைய விலைக்கு கொண்டுவரப்படும்.

·         கேபிள் டிவி கட்டணத்தை குறைப்போம்.

இப்படி பல உறுதிமொழிகளை சொல்லியிருக்கின்றோம்.

 

நம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேசுகின்ற போது சொன்னார். என்னவென்றால், ராகுல் காந்தி அவர்கள் ஒரு அருமையான உறுதிமொழியை சொல்லி இருக்கின்றார், அது என்னவென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் ஏழ்மையாக இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு மாதம் மாதம் 6,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகின்றது. இதை அறிவித்த ராகுல் காந்தி அவர்களுக்கு இந்த சிவகங்கை மண்ணிலிருந்து உங்கள் சார்பில் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் சார்பில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் ராகுல் காந்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றி உணர்வோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 

சிலருக்கு சந்தேகம் வரும், நமது கைக்கு வருமா? வராதா? என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, இந்த 72 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

இதைச்சொல்லுகின்ற போது ராகுல்காந்தி அவர்கள் குறிப்பிட்டார், இந்தியாவின் ஏழ்மையை ஒழிப்பதற்கான இறுதி முயற்சி இது என்று சொல்லியிருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் தேதி அறிவித்ததும் 6,000 ரூபாயை 3 தவணையாக தருகின்றேன் என்று சொன்னார். 

இதுவரையில் ஒரு தடவையாவது 2000 ரூபாய் வந்திருக்கின்றதா என்றால் வராது, வரவே வராது.

இந்தியா கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் இந்தியா பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மோடி ஆட்சி துவங்கியதிலிருந்து வேலை வாய்ப்புகள் தொடர்ந்து சரிய துவங்கி இருக்கின்றது.

 

மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியைப் பொறுத்தவரையில் இதுதான் நிலை. மாநிலத்தைப் பொறுத்தவரையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டமில்லாத இடத்தில் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கின்றார். இப்பொழுது சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கின்றது என்கிறார். கடந்த 7 வருடமாக பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். காவல்துறை என்ற ஒன்று இல்லையா? உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா? அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா? பகிரங்கமாக சொல்லுகின்றேன், பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இரண்டு மகன்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், குற்றவாளிகள் மீது இப்பொழுதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்.

 

அதைத் தொடர்ந்து கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதுதான் நீங்கள் ஆட்சி நடத்தும் இலட்சணமா?

மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைமையில் டாக்டர் மன்மோகன் சிங்க் அவர்கள் பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சி ஆற்றியிருக்கக்கூடிய சாதனைகள் அத்துனையும் உங்களுக்குத்தெரியும். எனவே, அந்த அடிப்படையில் தான் தேர்தல் அறிக்கையை தயாரித்து நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்கின்றோம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் அறிவித்திருக்கின்றோம்.

 

மானாமதுரை சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் நாம் சொல்லியிருக்கக்கூடிய உறுதிமொழி

·         இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும். திட்டத்தை கொண்டு வந்தது நாம் தான். ஆனால் அதை முறைப்படுத்துகின்ற பணியில் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி ஈடுபடவில்லை.

·         மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் மேலும் பல புதிய தொழில் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

·         மானாமதுரை வைகை ஆற்றில் கன்னார் தெருவில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்படும்.

·         மானாமதுரை பேரூராட்சியின் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு மானாமதுரை நகராட்சியாக அறிவிக்கப்படும்.

·         செய்களத்தூர் முதல் வாகுடி வரை உள்ள வைகை ஆற்றுப் பகுதிகளில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதால், இப்பகுதி குடிநீர் மண்டலமாக அறிவிக்கப்படும்.

·         தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருக்கக்கூடிய சுப்பன் கால்வாய் திட்டம் மற்றும் நாட்டார் கால்வாய் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

·         திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

·         காவிரி, வைகை, குண்டாறு ஆகியவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

·         வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை திருப்பாச்சேத்தி முத்தனேந்தல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டி குடிநீர் ஆதாரம் மேம்படுத்தப்படும்.

·         மூடப்பட்டிருக்கும் நூற்பாலைகளை திறந்து பலருக்கு வேலை வாய்ப்பு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கார்த்திக் சிதம்பரம் அவர்களை வெற்றி பெற வைக்கின்ற போது என்னென்ன வாக்குறுதிகள் நாங்கள் சொல்லப் போகிறோம் என்பதை நாம் வெளியிட்டிருக்கின்றோம். அதில் சிலவற்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகின்றேன்.

-    உலகிலேயே தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தொன்மை வாய்ந்தவை என்பதையும் தமிழர்களின் நாகரீகத்தையும் நிரூபிக்கும் வகையில் இருக்கக்கூடிய சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு மற்றும் தொல்லியல் ஆய்வு தொடங்குவதற்கு தேவையான நிதி உதவியும் ஏனைய உதவிகளும் செய்யப்படும்.

-    கீழடியில் கிடைத்துள்ள அருங்கலைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை காட்சிப்படுத்த அங்கு ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

-    மாநிலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எல்.ஐ.சி போன்றவற்றில் 90 சதவிகிதத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

-    பாசிச பா.ஜ.க ஆட்சியில் கொன்றுவிட்ட இந்தியா பொருளாதாரத்தை மீட்டு எடுத்திட பொருளாதார வல்லுனர்களே உள்ளடக்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

-    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிதி வழங்கப்படும்.

-என்று இப்படிப்பட்ட பல உறுதி மொழிகளை எந்த தைரியத்தில் நான் உங்களிடத்தில் எடுத்துச் சொல்கின்றேன் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்ற பொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குறள் போல் இரண்டு வரியில் சொல்லுவார்: “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்று. கலைஞர் சொன்னதை கலைஞரின் மகனான ஸ்டாலினாக நானும் சொல்கின்றேன் “சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்”.

 

நம்முடைய தலைவர் கலைஞர்  இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த நம்முடைய உன்னத தலைவர் இன்றைக்கு அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். எனவே, நாம் நம்முடைய வெற்றியை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் காலடியில் சமர்பித்து அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று கூறி விடைபெறுகின்றேன்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்