ADVERTISEMENT

இறந்து போனவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி-போலீசார் விசாரணை

07:42 PM Oct 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.எம்.சி சாலையில் கடந்த 17ம் தேதி தனியாக நடந்து வந்த சுமார் 65 வயது மதிக்க நபர் ஒருவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சுயநினைவின்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்த்தவர் என்ற விவரம் தெரியாத நிலையில் அவரது புகைப்படத்தை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் இவரை குறித்து விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு தகவல் வெளியிட்டிருந்தனர்.

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்த அவரது மகன் சின்னதம்பி மற்றும் மகள் வனிதா ஆகியோர் இவர் தனது தந்தை என்றும், திண்டுக்கல் அருகே உள்ள பெரிய கோட்டை அருகே பாறைப்பட்டி சொந்த கிராமம் என்றும், அவரது பெயர் பழனிசாமி இவரது தந்தை பெயர் அய்யாவு என்றும் கூறினார். இதனிடையே பழனிசாமி சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சின்னத்தம்பி தந்தையின் உடலை பெற்றுச் சென்று பாறைபட்டியில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று 20.10.22 இறந்து போனதாகக் கூறப்பட்ட பழனிசாமி திண்டுக்கல் நகருக்குள் சுற்றி திரிந்துள்ளார். இதனைப் பார்த்த ஊர் மக்கள், நீ இறந்து விட்டதாக கூறி உனது உடலை அடக்கம் செய்து காரியங்கள் அனைத்தும் செய்து விட்டதாக' தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பழனிசாமி பாறைப்பட்டிக்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, மகன் மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பழனிச்சாமியின் மகள் வனிதா மகன் சின்னத்தம்பி ஆகியோர் இறந்ததாகக் கூறப்பட்ட தனது தந்தை உயிருடன் வந்து விட்டதாகக் கூறி வடமதுரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்ததாகக் கருதப்பட்ட நபர் மீண்டும் ஊருக்குள் வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT