
திண்டுக்கல்லில் கடத்த திட்டமிடப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கலிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கலைமகள் காலனியில் லாரி மற்றும் ஆம்னி வேன்கள், பிக்கப் வேன், டாடா ஏசி, ஆகிய வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டு அங்குள்ள துரைராஜ் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். நேற்று ரோந்து பணிக்கு சென்ற சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர் கோமதி மற்றும் காவலர் ஸ்டாலின் ஆகியோர் லாரி மற்றும் வேன்கள் இருப்பதைப் பார்த்து அருகே சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக ரேஷன் அரிசி கடத்திய சின்னாளபட்டி பாரதி நகரைச் சேர்ந்த பெத்தனன் மகன் சதீஷ்குமார் மற்றும் லோடு மேன்கள் விஜி.சிங்கராஜ், மாரிமுத்து, ராஜா ஆகிய நால்வரையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்த டாடா ஏசி வண்டி, ஒரு லாரி, மூன்று ஆம்னி வேன், ஒரு பிக்கப் வேன் உட்பட 6 வாகனங்களையும் குற்றவாளிகளையும் குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
13 டன் ரேஷன் அரிசி கடத்தியது பிடிபட்டது குறித்து தகவல் தெரிந்தவுடன் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் எம்.பாஸ்கரன், தலைமையில் மதுரை சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், திண்டுக்கல் அலகு காவல் ஆய்வாளர் கீதா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், பனையராஜா, தலைமைக் காவலர் உதயசூரியன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வீட்டை பார்வையிட்டு அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்தனர். சின்னாளபட்டி பகுதியில் 6 வாகனங்களுடன் 13 டன் ரேஷன் அரிசி கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)