ADVERTISEMENT

“வீடியோ எடுத்தீங்கன்னா லாரி மேல ஏறிடும் பாத்துக்கங்க...” –  மணல் மாஃபியா கும்பல்  மிரட்டல்

04:21 PM Feb 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலாற்றில் மணல் அள்ளுவதற்காக அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வேலூர் அடுத்த அரும்பரிதி கிராமத்தில் மணல் அள்ளி நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை விற்பனை செய்து வருகின்றது. மணல் யார்டு புதுக்கோட்டை தரப்பு எடுத்துள்ளது. கரிகாலன் என்பவர் அதனை மேற்பார்வை செய்து வருகிறார்.

அரசு விதிகளை மீறி மணல் அள்ளுவது, நீர்வளத்துறை மண் அள்ள அனுமதி தந்த இடத்தை தாண்டி பல நூறு ஏக்கர்களுக்கு மணல் அள்ளுவது, மணல் அள்ள தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்கிற விதிகளை மீறி இயந்திரத்தை பயன்படுத்தி மணல் அள்ளி நிரப்புவது. 1 மீட்டர் ஆழத்துக்கு பதில் 10 மீட்டர் ஆழம் வரை மணல் தோண்டி எடுப்பது, ஆற்றிலேயே மணலை மலைப்போல் குவித்து வைத்து நீர் வழித்தடத்தை மாற்றுவது என அனைத்து விதிகளையும் மீறி மணல் அள்ளுகின்றனர். எங்கள் கிராம எல்லையில் வந்து மணல் அள்ளுகிறார்கள் என பெருமுகை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் போராட்டம் செய்தார்கள். இதில் சிலர் மணல் மாஃபியாக்களிடம் விலைப் போனதால் அந்த போராட்டம் பிசுபிசுத்துப் போனது.

இந்நிலையில் விதிகளை மீறி மணல் அள்ளுகிறார்கள் இதனால் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இப்போதே எங்களுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் தந்தும் புகாரே வரவில்லை என்று சொல்கிறார் என்கிறார்கள் அரும்பரிதி கிராம மக்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி நாள் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தில் 150க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சமூக ஆர்வலர்கள் பலரும் நேரில் சென்று இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், பாலாற்றில் இறங்கிச் சென்று விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படும் பகுதிகள், இயந்திரங்கள் போன்றவற்றை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது மணல் யார்டில் இருந்த மணல் மாஃபியா குண்டர்கள் செய்தியாளர்களைச் சுற்றி வளைத்து, இங்க வந்து வீடியோ எடுத்தீங்கன்னா லாரி மோதிட்டு போய்டும் பார்த்துக்கங்க என மிரட்டியுள்ளனர். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, குண்டர்கள் தாக்க முயன்றுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வந்த போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஆற்றுக்குள் வந்து குண்டர்களிடமிருந்து செய்தியாளர்களை மீட்டுள்ளனர். மிரட்டிய மணல் மாஃபியா குண்டர்களை காவல்துறையினர் எதுவும் சொல்லவில்லையாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT