ADVERTISEMENT

சேலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டு மாயமான காதலன் போலீசில் சரணடைந்தார்!

11:27 PM Sep 01, 2019 | santhoshb@nakk…

சேலம் அருகே, திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றிவிட்டு மாயமான காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம் நடத்திய நிலையில், காதலன் திடீரென்று காவல்நிலையத்தில் சரணடைந்து உள்ளார்.

சேலம் கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (21). இவரும், அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி பூபதி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பூபதியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கவுசல்யா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூபதியும், சாதியைக் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்தார்.

இதனால் விரக்தி அடைந்த கவுசல்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பூபதியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், கவுசல்யாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

ADVERTISEMENT



இது ஒருபுறம் இருக்க, பூபதியும் அவருடைய பெற்றோரும் திடீரென்று தலைமறைவாகினர். நேற்று (ஆக. 31), பூபதியின் வீட்டுக்குச் சென்ற கவுசல்யா, அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பூபதியை, அவருடைய தாயும், உறவினர்களும் சேர்ந்து கடத்திச்சென்று விட்டதாக கவுசல்யா கூறினார். ஊர் மக்களும் அவருக்கு பக்கபலமாக பூபதி வீட்டு முன்பு கூடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள், நிகழ்விடம் சென்று விசாரித்தனர். அவர்கள் கவுசல்யாவை சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டார்.

ADVERTISEMENT


இந்நிலையில், கவுசல்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கொலைமிரட்டல் விடுத்து துன்புறுத்தியதாக பூபதி (27), அவருடைய தாய் சாரதா, தந்தை மணி, அக்காள் விஜயலட்சுமி, தம்பி தனசேகர், மாமா கேசவன் ஆகிய 6 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், காதலன் பூபதி ஞாயிற்றுக்கிழமை (செப். 1, 2019) காலை கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் நேரில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT