ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.24 அடியாக சரிவு!

03:28 PM Oct 11, 2019 | santhoshb@nakk…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்ததால், நீர்மட்டம் 116.240 அடியாக சரிந்துள்ளது.

ADVERTISEMENT


கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, அங்குள்ள கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும், தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டன. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை வேகமாக எட்டியது. அதைத்தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

ADVERTISEMENT


அதன்பிறகும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால், செப். 7ம் தேதியன்று, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர், கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைந்தது, அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கணிசமாக குறைந்தது. இந்நிலையில், செப். மாத இறுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்ததால், மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. அதாவது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அணை நிரம்பியது.


தற்போது கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. மேலும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.240 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.5 டிஎம்சி ஆக இருந்தது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13404 கன அடியாக நீர் வரத்து இருந்தது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 22000 கன அடி வீதமும், மேற்குக் கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT