ADVERTISEMENT

இளம்பெண் தற்கொலை! கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

06:26 PM Jan 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (30). இவர் விருத்தாசலம் வருவாய்த் துறையில் மங்கலம்பேட்டை குறுவட்டத்தின் நில அளவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிபாரதி (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆன நிலையில் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மணிபாரதியிடம் வரதட்சணை கேட்டு சிவா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மணிபாரதி கணவரிடம் கோபித்துக்கொண்டு நெய்வேலி அருகே உள்ள தொப்பிளிக்குப்பம் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் மனமுடைந்த நிலையில் இருந்த மணிபாரதி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிபாரதி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 'மணிபாரதியின் உயிரிழப்புக்கு அவரது கணவர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமை தான் காரணம், அதனால் சிவாவை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற மணிபாரதியின் உறவினர்கள் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம், இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT