woman and her friend arrested in old lady passed away case

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி தையல்நாயகி(67). இவர், கடந்த 25 ஆம் தேதி இரவு சாப்பிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதையடுத்து, காவல்துறை அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ததில், அவரை முகத்தில் துணியால் அழுத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடலூர் மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின்பேரில், திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில், தையல்நாயகியின் தம்பி சுப்பிரமணியன் மகள் ரேவதி கடந்த 25 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தையல்நாயகியை‌ பார்க்க வந்ததும், பின்னர் 12 மணியளவில் தையல்நாயகி வீட்டிலிருந்து ரேவதி சென்றதையும் பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

இதையடுத்து ரேவதியிடம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரேவதி தனது அத்தை தையல்நாயகியிடம் அடிக்கடி கடன் கேட்டு வந்துள்ளார். அதற்கு தையல்நாயகி மறுத்துள்ளார். இதனால் திட்டமிட்ட ரேவதி சம்பவத்தன்று இரவு தையல்நாயகியை‌ நலம் விசாரிப்பது போல் அவரது வீட்டிற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கொண்டே பெண்ணாடத்தை சேர்ந்த தன்னுடைய ஆண் நண்பர் சுதாகரன் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தையல்நாயகி முகத்தில் போர்வையால் அழுத்திகொலை செய்து தையல்நாயகி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

woman and her friend arrested in old lady passed away case

இதையடுத்து மூதாட்டியை கொலை செய்த பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ரேவதி (36) மற்றும் அவரது ஆண் நண்பரான கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதாகரன்(43) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மூதாட்டியின் 6 பவுன் நகையைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த வேப்பூர் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பாராட்டினார்.