ADVERTISEMENT

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

08:14 AM Mar 18, 2024 | mathi23

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT