
கிருஷ்ணகிரி அருகே, பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு கிராமத்தையே உலுக்கி எடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எலுவப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவருடைய மகன் பிரதீப் (வயது 25). கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. திருமணமாகி மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், அவருடைய மனைவி இரண்டாவது பிரசவத்திற்காக, தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்தக் குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகின்றன.
மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டதால், பிரதீப் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பிப்.8- ஆம் தேதி நள்ளிரவு, உள்ளூரில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பிரதீப்பின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் தனியாக கிடந்தது ஊர் மக்களுக்குத் தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், இதுகுறித்து பாகலூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, தலையைக் கைப்பற்றி விசாரித்தனர். பிரதீப்பின் உடல் அருகில் எங்காவது வீசப்பட்டிருக்கலாம் எனக்கருதி, தேடிப்பார்த்தனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை.
இதையடுத்து தலையை மட்டும், உடல் கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, உடலைத் தேடும் பணிகளை முடுக்கி விட்டனர். பிப். 9ம் தேதி அதிகாலையில் சடலத்தைத் தேடிய மோப்ப நாய், மாரியம்மன் கோயில் திடலில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கேழ்வரகு கொல்லை பகுதியில் சென்று காவல்துறை மோப்ப நாய் நின்று கொண்டது. அந்தப் பகுதியில் தேடிப்பார்த்தபோது, பிரதீப்பின் முண்டம் கிடைத்தது. அந்த உடலையும், கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலை கிடந்த இடத்திலும், முண்டம் கைப்பற்றப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் ஏதும் இல்லை. அதனால் கொலையாளிகள் பிரதீப்பை, வேறு எங்காவது ஓரிடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, தலை வேறு, முண்டம் வேறாக உள்ளூரில் வந்து வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உள்ளூரில் யாருக்கோ அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதை தெரிவிப்பதற்காகவோ அல்லது நாளைக்கு உனக்கும் இதே கதிதான் என அச்சுறுத்துவதற்காகவோ பிரதீப்பின் தலையை கோயில் திடலில் போட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
கொலையுண்ட பிரதீப்பின் பின்னணி குறித்து விசாரித்தபோது, காவல்துறையில் அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஏதேனும் முன் விரோதமா? அதனால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எலுவப்பள்ளி கிராமத்தையே உலுக்கி உள்ளது.