Skip to main content

இடி தாக்கி 16 ஆடுகள் உயிரிழப்பு... சோகத்தில் கிராமம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

PUDUKKOTTAI DISTRICT RAIN FARMER


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூர் நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இவர் வழக்கம்போல நேற்று (27/05/2020) ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்துள்ளது. மழை காரணமாக ஆடுகள் அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், திடீரென கடுமையான மின்னலுடன் புளிய மரத்தின் மீது இடி விழுந்ததில் 16 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
 


சம்பவம் குறித்து மணமேல்குடி வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினர் வந்து இடி தாக்கி இறந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். இந்தச் சம்பவத்தில் விவசாயி ஆறுமுகம் மழை பெய்தபோது ஆடுகளுடன் நிற்காமல் வேறு பகுதியில் நின்றதால் உயிர் தப்பினார். 

ஆறுமுகம் வளர்த்த 16 ஆடுகளும் ஒரே நேரத்தில் இடியால் உயிரிழந்தது அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விவசாயி ஆறுமுகத்திற்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.