ADVERTISEMENT

"என்னுடன் படித்த 17 பேரில் 3 பேர் மட்டுமே இப்போது படிக்கிறோம்" - வேதனையில் ஆதனக்கோட்டை ஜெயலெட்சுமி

03:23 PM Feb 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே நாசாவிற்கு செல்ல தேர்வான மாணவி ஆதனக்கோட்டை ஜெயலெட்சுமி. தங்கள் ஊரில் உள்ள சாலையோர முந்திரி கொட்டை உடைக்கும் அடுப்புகளில் வேலை செய்து கொண்டிருந்தார். நாசா செல்ல தேர்வானாலும் வறுமை வதைத்தது. நாசா செல்ல பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். ஆனால் கொரோனா முட்டுக்கட்டை போட்டது.

இந்த நிலையில் தான் மாணவிக்கு உதவி செய்ய கிராமாலாயா முன்வந்த போது நாசாவிற்கு போகவிடாமல் கொரோனா தடுத்து விட்டது என்பதை சொன்ன மாணவியிடம் உங்கள் வீட்டில் கழிவறை உள்ளதா? இல்லையென்றால் கட்டித் தருகிறோம் என்றபோது இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, “என் வீட்டில் மட்டுமல்ல, எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால் என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுகிறோம். 2 கி.மீ. தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்குள்ள டாஸ்மாக் கடைகளை கடந்து போகணும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகணும். அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு வயசு பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க. அதனால எங்க ஊருக்கு எல்லாருக்கும் கழிவறை கட்டித் தர முடியுமா?” என்று கேட்டார். சுமார் 125 வீடுகளுக்கு கிராமாலாயா மூலம் கழிவறை கட்டிக் கொடுக்க வைத்தார்.

மாணவியின் இந்த செயலை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டினார். கனிமொழி எம்.பி வீட்டிற்கே சென்று பாராட்டினார்கள். இப்படி ஏராளமான பாராட்டுகள், பரிசுகள், பதக்கங்கள் கிடைத்தது. மராட்டிய மாநிலத்தில் மாணவி ஜெயலட்சுமி எழுதிய கனவு மெய்ப்படும் என்ற கட்டுரை 7ம் வகுப்பு பாலபாரதி தமிழ் புத்தகத்தில் பாடமாகவே வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இவரது கனவு மெய்ப்பட விரும்பிய ஒரு படிப்பை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி கட்டணமில்லாமல் தருவதாகச் சொல்லி ஒரு வருடத்திற்குப் பிறகு ஏமாற்றியதால் இளங்கலை வரலாறு படித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இலக்கு யூபிஎஸ்சி தான் அதற்காக படித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக 11 சான்றிதழ் படிப்புகளையும், ஒரு பட்டயப் படிப்பையும் முடித்துவிட்டேன். 3 உலக ரெக்கார்ட் செய்துவிட்டேன். ஆனால், தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். என்னுடன் படித்த 17 பேரில் 3 பேர் மட்டுமே இப்போ மேற்கொண்டு படிக்கிறோம். மற்றவர்களில் பலர் திருமணமாகி விட்டனர். என்னை விட நன்றாக படித்த என் தோழியும் இன்று குழந்தையுடன் இருக்கிறாள். படிக்க ஆசையா இருக்கு. ஆனால், படிக்க முடியல என்று கண்ணீர் வடிக்கிறாள்" என்று வேதனையாகச் சொல்லி முடித்தார். இன்னும் நிறைய மாற வேண்டும், மாற்ற வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT