ADVERTISEMENT

“மக்களைத் தவிக்கவிட்ட மின்வெட்டு... அலட்சியம் காட்டக் கூடாது” - ராமதாஸ் 

11:37 AM Apr 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 7.30 முதல் பல இடங்களில் விட்டுவிட்டும், சில இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு நிலவியதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு நீடித்தது. இனி இப்படி நிகழக்கூடாது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டது தான் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல, தற்சார்பு மாநிலமும் அல்ல. தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.


நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதி தான் நான் எச்சரித்திருந்தேன். நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT