Skip to main content

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் யோசனை

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

 

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்கு வசதியாக மொத்தம் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், அமைதியாக தேர்தலை நடத்த இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

 

tasmac



தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30-ஆம் தேதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு, அதாவது 25-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5.00 மணி வரையிலும், அதேபோல், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 28-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5.00 மணி வரையிலும் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. இவை தவிர வாக்கு எண்ணும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழக அரசின் இந்த ஆணைப்படி முதல் இரு கட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவடைகிறதோ இல்லையோ, அன்று மாலை 5.00 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது வணிகம் தொடங்கி விடும். அதுமட்டுமின்றி, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு நடைபெறுகிறதோ, அந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க  எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்த உதவாது என்பது மட்டுமின்றி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


 

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு என்பது வாக்குப்பதிவு நாளின் மாலை 5.00 மணியுடன் நிறைவு பெறும் நிகழ்வு அல்ல. உள்ளாட்சித் தேர்தல்களுக்கும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில்  வாக்காளர்கள் ஒரே ஒரு வாக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்குள் அனைவரும் வாக்களித்து விடுவர் என்பது மட்டுமின்றி, அடுத்த சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப் பட்டு விடும். அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் நடந்த தடமே தெரியாத அளவுக்கு சூழல் மாறிவிடும்.
 

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அப்படிப்பட்டதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சீட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஊரக உள்ளாட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் என மொத்தம் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 750 வாக்குகள் இருக்கும் என்பதாலும், வாக்காளர்கள்  வாக்குச்சீட்டை நன்கு ஆராய்ந்து தான் வாக்களிக்க முடியும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதனால், மாலை 5.00 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைய வாய்ப்புகளே இல்லை.
 

மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு அடையாளச்சீட்டு கொடுத்து, அவர்கள் அனைவரும் வாக்களித்து முடிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் இரு மணி நேரம் வரை ஆகும். அத்தகைய சூழலில் தேர்தல் முடிவடைவதற்கு முன்பாகவே மாலை 5.00 மணிக்கே மதுக்கடை  திறக்கப்பட்டால் அது அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கான சூழலை சீர்குலைத்து விடும். அதுமட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் போட்டியிடுவர் என்பதாலும், போட்டி கடுமையாக இருக்கும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய மோதல்கள் அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி  இடைத்தேர்தல்களின் போது வாக்குப்பதிவு நாள் முழுவதும் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை திறந்து வைக்கலாம்; தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்பதும் நல்லதல்ல.  போக்குவரத்து வசதி அதிகரித்து விட்ட சூழலில் 5 கி.மீட்டருக்கும் அப்பால் சென்று மதுவை வாங்கி வருவதோ, தேர்தல் நடைபெறாத அண்டை மாவட்டத்துக்குச் சென்று மதுப்புட்டிகளை வாங்கி வருவதோ கடினமான ஒன்றல்ல. அதேபோல், 25 மற்றும் 28-ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் இருக்கும் என்பதால் மதுவை வாங்கி வைக்கவும் வாய்ப்புள்ளது.  இவை அனைத்துமே தேர்தல்களில் மோதலையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு தான் வழிவகுக்கும்.
 

எனவே, முதல் கட்டத் தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்கள் முன்பாக அதாவது 25-ஆம் தேதி    முதல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 30-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து தான் மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.