Skip to main content

என்ன செய்யப் போகிறது பாமக?

 

What is pmk going to do in upcoming election

 

'தேர்தல் திருவிழா 2021' மிக விரைவில் கொடியேற்றிக் கொண்டாடப்பட இருக்கிறது.

 

அதற்குள், அனல் பறக்கும் அதிரடி பேச்சுகள், கனல் தெறிக்கும் கட்சிக் கூட்டங்கள் என அரசியல் ஃபீவர் அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது. 'கூட்டணிக் கணக்குகள்?', 'மூன்றாவது அணி?' எனத் தேர்தலுக்குத் தேர்தல் பேசப்படும் அத்தனை ஹேஷ்யங்களும் இப்போதும் இடம்பெறுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கட்சித் தாவல் நடந்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான பாமகவின் நிலைப்பாடு இந்தத் தேர்தலில் என்னவாக இருக்கும் எனப் பலரும் நகம் கடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

 

கடந்த 2016 தேர்தலில் 'மாற்றம்! முன்னேற்றம்! அன்புமணி!' எனும் டேக் லைனுடன் களம் கண்டது பாமக. எதிர்பார்த்த 'முதல் கையெழுத்து' போடமுடியாவிட்டாலும் முக்கியக் கட்சி என்னும் அடையாளத்தை 5.3% வாக்குகள் பெற்று தக்கவைத்துக் கொண்டது. இதனால், தேர்தலுக்குத் தேர்தல் பாமக பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது. 2019, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து ஆளுநரிடம் 'ஊழல் புகார்' வாசித்தது பாமக.

 

What is pmk going to do in upcoming election

 

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் அதே பா.ம.க.தான். இதையொட்டி, தைலாபுரத்திற்கு அதிமுக தலைவர்கள் படையெடுத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இரண்டு கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றும், பாமகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட தர்மபுரியில், அன்புமணியே தோல்வியைத் தழுவினார்.

 

கடந்த தேர்தல்களில் சரிவைச் சந்தித்துள்ள பாமக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போன தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம்' என்றால், இந்தத் தேர்தலில் 'உள் இட ஒதுக்கீட்டை' கையில் ஏந்தியுள்ளது. இதனால், உள் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. இதன்பிறகு நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில், 'அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா?' என ராமதாஸ் உருக்கமாகப் பேசினார். இதனால், பாமக தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் பரவியது. 

 

ஆனாலும் பாமக அதிமுக இடையே புகைச்சல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்றும் பாமக கூடுதல் தொகுதிகள் கேட்கிறது, அதிமுக தயக்கம் காட்டுகிறது என்றும் செய்திகள் றெக்கை கட்டியது. மேலும், உள் இட ஒதுக்கீடு சமாச்சாரத்தில் ராமதாஸ் உறுதியாக இருக்க, அதிமுக சமரசம் செய்ய முயன்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற இருந்த பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக பாமகவினர் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக, "வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில், வரும் 31ம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுவில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்" என கெடு விதித்துள்ளார் ராமதாஸ். இதனால் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

cnc

 

இன்னொருபுறம், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் 'வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால், கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்' என்றார் ஜி.கே.மணி. இதனால், திமுக-பாமக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு, ஜனவரி 25-ஆம் தேதி வெளியான முரசொலி இதழில், 'திமுகவை குறிவைக்கும் இலவு காத்த கிளி! மருத்துவர் ஐயாவின் பகல் கனவு' எனும் கட்டுரை, திமுக-பாமக கூட்டணி ஊகங்களைத் தவிடுபொடியாக்கியது.

 

திமுக கூட்டணியில் பாமக இணைவது பற்றி முரசொலி பதில் சொல்லிவிட்டது. அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து வரும் 31-ஆம் தேதி ஆலோசிக்க இருப்பதாக ராமதாசே கூறிவிட்டார். இந்நிலையில், பாமக, மீண்டும் தனித்துக் களமிறங்கப் போகிறதா அல்லது மூன்றாம் அணியைக் கட்டும் முயற்சியில் இறங்கப் போகிறதா எனப் பல்வேறு கேள்விகள் அரசியல் அரங்கில் எழுப்பப்படுகிறது.

 

என்ன செய்யப் போகிறது பாமக?