ADVERTISEMENT

27 பவுன் நகையுடன் மாயமானவர் கைது...!!

04:19 PM Dec 01, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நகைகளை விற்றுத் தருவதாகக் கூறி, 27 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மாயமான நபரை போலீஸார் கைது செய்தனர்.


தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி கம்பளி நாடார் தெருவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் வாஜித் அகமது. இவர், கடன் பிரச்சனை காரணமாகத் தன்னிடம் இருந்த 27 பவுன் நகைகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, தேனியைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் அதுபற்றி கூறியிருக்கிறார். அதனைக் கேட்ட அவரது நண்பர், போடி சகாதேவன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகனான லலித்குமாரை, வாஜித் அகமதுவிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

லலித்குமார், போடியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாக வாஜித் அகமதுவிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய வாஜித், கடந்த மாதம் 6 -ஆம் தேதி தன்னுடைய 27 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போடிக்கு வந்து, லலித்குமாரை சந்தித்துள்ளார். அப்போது நகைகளை லலித்குமாரிடம் காட்டிவிட்டு, தனது இருசக்கர வாகன டேங் கவரில், நகைகளை வைத்துள்ளார்.

அதனை நோட்டம்விட்ட லலித்குமார், வாஜித் அகமதுவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருசக்கர வாகன டேங் கவரில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். சிறுது நேரத்தில் தன்னுடைய நகைகள் திருடப்பட்டதை அறிந்த வாஜித் அகமது, போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரிக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த லலித்குமார் தலைமறைவானார்.


சுமார் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த லலித்குமாரை நேற்று ரோந்துப் பணியில் இருந்த போடி போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாஜித் அகமதுவின் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து லலித்குமாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும் போது, எவ்வளவு நகையாக இருந்தாலும் விற்றுத்தருவதாக லலித்குமார் கூறியிருக்கிறார். அதனை வாஜித் அகமது நம்பி ஏமாந்துள்ளார். லலித்குமார், போடி வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், வங்கி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். வாஜித் அகமது போல இன்னும் எத்தனை பேரிடம் லலித்குமார் கைவரிசை காட்டியுள்ளார் என விசாரணை நடக்கிறது என்று கூறினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT