ADVERTISEMENT

தொடரும் வதந்திகள்; அதிகரிக்கும் தாக்குதல் சம்பவங்கள்

12:04 PM Mar 07, 2024 | kalaimohan

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் வடமாநில கும்பல் ஒன்று முகாமிட்டு குழந்தைகளை கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் செம்படமுத்தூர் பகுதிக்கு சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை அப்பகுதி மக்கள் குழந்தைகளை கடத்த வந்த நபர்கள் எனக்கருதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நான்கு பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அறிவிப்புக்கு பிறகும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT