Skip to main content

தடுப்பூசி திருவிழாவில் ஆர்வம் காட்டாத தமிழக மக்கள்... நாளை மீண்டும் ஆலோசனை!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

People of Tamil Nadu who are not interested in the vaccination festival ... consult again tomorrow!

 

இந்தியாவில் நேற்று (14.04.2021) ஒரேநாளில் 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,038 பேர் கரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் நேற்று 93,528 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

 

தமிழகத்திலும் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

 

தமிழகத்தில் நேற்று, கரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கிய நிலையில் முதல் நாளான நேற்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று வெறும் 75,000 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களிடம் ஆர்வமில்லாத நிலையே தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு என்பது 8 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், நாளை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கரோனா கட்டுப்பாடுகளை தமிழகத்தில் மேலும் அதிகப்படுத்துவது குறித்து விவாதிக்க  வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்