ADVERTISEMENT

ஹெல்மெட் இல்லையா? ஈரோட்டில் வாகனங்கள் பறிமுதல்..!

08:51 AM Oct 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், அதேபோல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஈரோடு எஸ்.பி. சசிமோகன் அறிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த அறிவிப்பை பின்பற்றவில்லை. இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வந்தனர். மேலும் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தனர்.

கரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 13 ந் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு 13 ந் தேதி அமலுக்கு வந்தது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் நினைவு தூண், அரசு மருத்துவமனை ரவுண்டானா, கருங்கல்பாளையம் உட்பட ஏழு இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிற்க வைத்து அவர்களின் வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டு அபராதம் விதித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப்போல் கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தனித்தனியாகச் சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களுக்குச் சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் லைசென்ஸ் இல்லாமல் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்தனர். கோபி பகுதியில் 350 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அம்மாபேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அம்மாபேட்டை பகுதியிலும் 300 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முதல் நாள் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைச் சிறிது நேரம் வைத்து விட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் இருசக்கர வாகனம் கண்டிப்பாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைப்போல் சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி என மாவட்டம் முழுவதும் போலீசார் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் ஒரே நாளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் உரியவர்களிடம் வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT