/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_205.jpg)
நாமக்கல் அருகே இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, மர்ம நபர்கள் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்து 4 ஆயிரம் வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா(28). இவர், வீடு அருகே உள்ள அடர்ந்த முள் புதர் பகுதியில் வைத்து, கடந்த மார்ச் 11ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும், இந்த பின்னணியில் அங்குள்ள கரும்பாலைகளில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகம் கிளப்பினர்.
இதையடுத்து, நித்யா கொல்லப்பட்ட பிறகு ஜேடர்பாளையம், கரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிலரின் வீடுகள், வயல்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு, டிராக்டர்களுக்கு தீ வைப்பு, வெல்ல ஆலையில் உள்ள குடியிருப்பு மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், சிலரை குறி வைத்து அவர்களின் வயல்களில் இறங்கும் மர்ம நபர்கள் பாக்கு மரங்கள், வாழை மரங்கள், மரவள்ளிக்கிழங்கு பயிர்களை அடியோடு நாசப்படுத்தி வரும் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 7 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் திடீர் திடீரென்று நடந்து வருகின்றன. அசம்பாவிதங்களைத் தடுக்க நாமக்கல் மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் பல மாதங்களாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பயிர்களை நாசப்படுத்தும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிசாமி என்கிற மணி (55), விஜய் (25), சூர்யா (18), பூபதி (46), பிரசாத் (25), மெய்யழகன் (27), பரணிதரன் (18), தனுஷ் (20) ஆகிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, இனி வயல்களில் பயிர்களை அழிக்கும் சம்பவங்கள் நடக்காது எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி நள்ளிரவு கொத்தமங்கலத்தில் உள்ள தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்ரமணி ஆகியோருக்குச் சொந்தமான தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 1500 வாழை மரங்களை வெட்டி வீழ்த்தினர். வழக்கறிஞர் சுப்ரமணி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 பாக்கு மரங்களையும், சின்ன மருதூரைச் சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் இருந்த 2600 பாக்கு மரங்களையும் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
இதன் பரபரப்பு அடங்குவதற்குள் நவ. 10ம் தேதி நள்ளிரவு, வீ.புதுப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ மணி என்கிற சுப்ரமணி (42) என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த 4 ஆயிரம் வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.
தோடத்தின் உரிமையாளர் சுப்ரமணி கூறுகையில், “இரண்டு ஏக்கர் நிலத்தில் 10 மாதங்களுக்கு முன்பு வாழை பயிரிட்டு இருந்தேன். நன்கு வளர்ந்து குலை தள்ளும் நிலையில் இருந்தன. இந்த மரங்களை வெட்டி சாய்த்ததால் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்வதோடு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். இளம்பெண் நித்யாவின் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சந்தேகிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், 7 மாவட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டும், ஒரே மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)