ADVERTISEMENT

கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்;மாணவனின் தந்தை குமுறல்!!

11:14 PM Aug 17, 2018 | bagathsingh

கொத்தமங்கலத்தில் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ள பள்ளி மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறினார்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10, மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் சாதித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர்களை உருவாக்கும் பள்ளியாக இருந்தது. 100 சதவீதம் தேர்ச்சி பெரும் பள்ளிகளில் ஒன்றாக இருந்தது. அதனால் கீரமங்கலம், செரியலூர், வடகாடு, சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், ஆலங்காடு போன்ற பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்தனர். தனியார் பள்ளியில் படித்த பல மாணவர்கள் கொத்தமங்கலம் அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் வகுப்புகளில் தள்ளாட்டத்துடனும், பலர் வகுப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்துள்ளது. இதனால் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரணமாக கடைகளில் கடைக்கும் ஒரு திரவத்தை மாணவர்கள் அடிக்கடி வாங்கி குடிக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து கொத்தமங்கலம் கடைவீதியில் அந்த திரவப் பொருளை விற்பனை செய்ய கூடாது என கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

இந்த நிலையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் இருந்து இடையில் வெளியே செல்வதும் அதன் பிறகு அந்த மாணவர்கள் ஒரு மாதிரியாக வருவதுமாக இருந்துள்ளனர். அதே போல வீடுகளிலும் அவர்களின் நடவடிக்கை தவறாக இருந்துள்ளது. இதில் சில பெற்றோர்கள் தொடர்ந்து அந்த மாணவர்களை கண்காணித்த போது அந்த மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தது தெரிய வந்தது. அதனால் சில மாணவர்களை பள்ளிக்கே அனுப்பவில்லை பெற்றோர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் மகன் கஞ்சா போதைக்கு அடிமையான தகவல் அறிந்து வெளிநாட்டில் இருந்து வேலையைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய தந்தை மாணவனின் நடவடிக்கையை கண்காணித்த போது அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு நாட்கள் அந்த மாணவனுக்கே தெரியாமல் கஞ்சா பொட்டலம் எடுக்கப்பட்ட நிலையில் 3 வது நாளில் அந்த மாணவன் தாய், தந்தையை மிரட்ட தொடங்கியுள்ளான். ஆதன் பிறகு அந்த மாணவனை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து பல மாதங்கள் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கூறும் போது.. கொத்தமங்கலம் அதிகம் படித்தவர்கள் உள்ள கிராமம். மாவட்டத்திலேயே பெரிய கிராமம் இது. ஏராளமான அரசு, தனியார் நிறுவன ஊழியர்களையும் பொறியாளர்களையும், மருத்துவர்கள், ஆசிரியர்களையும் உருவாக்கியது இந்த கிராமம். அத்தனை பேரும் அரசு பள்ளியில் தான் படித்தனர். பல நூறு பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.

என் மகனின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று தகவல் அறிந்து என் வேலையை விட்டு ஊருக்கு வந்தேன். அவனது நடவடிக்கைகளை கண்காணித்த போது அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளது தெரிய வந்தது. அதே போல 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிந்ததால் உடனே சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறேன். கஞ்சா பற்றிய ஞாபகம் வரும் பொது பெற்றோர்களான எங்களையே அடிக்க பாய்கிறான்.

என் மகனுக்கு நான் செலவு செய்து சிகிச்சை கொடுக்கிறேன். ஆனால் இன்னும் பல ஏழை பெற்றோர் மாணவர்களின் நிலை தெரியாமல் உள்ளனர். அதனால் அரசே பள்ளி மாணவர்களுக்கு சோதனை செய்து தகுந்த சிகிச்சையும், ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் கஞ்சா விற்பனை செய்யும் முன்னால் மாணவனையும் பிடிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மக்கள் பாதை இயக்கத்தின் ராசேந்திரன் கூறும் போது.. கஞ்சாவுக்கு மட்டுமின்றி பல்வேறு போதைகளுக்கும் மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். அதாவது சில இளைஞர்கள் தங்களின் சுயநலத்திற்காக சில மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கஞ்சா போன்ற போதை பொருளை கொடுத்து அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து தவறான வழிக்கு இழுத்துச் செல்கிறார்கள். இப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா போதைக்கு அடிமையான ஒரு மாணவன் தான் தற்போது கஞ்சாவை மாணவர்களிடம் கொடுப்பதாகவும் போன் செய்தால் மாணவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். அதனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இளைய சமுதாயத்தை காப்பாற்றலாம் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT