Action against headmaster of the students go to petition collector in school uniform

பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையில் அவர்களின் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதற்குசங்கங்களும் சமூக ஆர்வலர்களும் வெகுண்டெழுந்துள்ளனர்.

Advertisment

பள்ளி மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் தங்களுக்கான குடிதண்ணீர், சாலை, மின் இணைப்பு, வகுப்புச்சான்று போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்தும் கிடைக்காத நிலையில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதால் விரைவில் தீர்வுகள் கிடைக்கிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இதே போல ஒவ்வொரு வாரமும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளான பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி சீருடையுடன் அழைத்துச் சென்று மனு கொடுத்து வருகின்றனர். பள்ளி சீருடையில் சென்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகாரிகள் நேரடியாகவும், விரைவாகவும் கேட்கின்றனர். தீர்வுகளும் கிடைக்கிறது. இதனால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா 10 ஆம்தேதி கையெழுத்திட்டு அனைத்து பள்ளிகள், கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.. அந்த சுற்றறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி அறிவுரைகள் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்கூட்டத்தில், பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் பெற்றோர்களுடன் சீருடையில் மனு அளிக்க வருவது ஆய்வு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இந்நிலையை தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படின், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “கிராமத்து ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அந்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு போறதில் என்ன தவறு உள்ளது. கோரிக்கையை அவர்கள் கொண்டு வரும் போது தானே தீர்க்கப்படுகிறது. பல முறை பெற்றோர்கள் அலைந்தும் தீராத பிரச்சனைகளை பள்ளி சீருடையுடன் மாணவர்களுடன் போனால் உடனே தீர்வு கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர்களும் அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சீருடையை ஒரு நல்ல உடையாகவும் பார்க்கிறார்கள். அதே நேரம் பள்ளிக்கே வராமல் மாணவர்கள் பெற்றோருடன் போனாலும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை என்றால் இது ஆசிரியர்களை நேரடியாகவும் மாணவர்களின் பெற்றோர்களை மறைமுகமாகவும் மிரட்டுவது போல உள்ளது. அதாவது மாணவர்களின் பெற்றோர்கள் அடிப்படை வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் வருவதை தடுக்கும் செயலாக பார்க்கிறோம். உடனே இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தவும் ஆசிரியர் சங்கங்கள் தயாராகி உள்ளனர்” என்கின்றனர்.