ADVERTISEMENT

முக்கொம்பு தாங்குமா ? மீண்டும் வரும் பேராபத்து!

11:30 AM Aug 13, 2019 | kalaimohan

ADVERTISEMENT

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. கபினி அணை நிரம்பியதால் அங்கிருந்து வினாடிக்கு 90,000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 124 அடி. அங்கு தற்போது நீர்மட்டம் 96 அடியாக இருக்கிறது. அந்த அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. அதன்பின் அங்கு வரும் நீர் மொத்தமும் காவிரியில் திறந்து விடப்படும்.

இந்நிலையில் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 101 கனஅடிக்கும் மேல் நீர் இருக்கிறது. கர்நாடகாவிலிருந்து 2 நாளில் குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் கனஅடி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த தண்ணீர் வந்தால் சில நாட்களில் நாளில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். அதன்பின் மேட்டூருக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படும். இந்த சூழலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது முக்கொம்பு அணை.

ADVERTISEMENT


முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஆங்கிலேயர் காலத்து பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது. இதனால் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது காவிரியில் 30 முதல்40 ,000 கனஅடி தண்ணீர் வரும்வரை தாங்கும் அதற்கு மேல் நீர்வரத்து இருந்தால் மணல் மூட்டைகளும், மீதமிருக்கும் பாலமும் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.

இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் காவிரியில் தண்ணீரை கட்டுப்படுத்தி திறக்க முடியாது.

இந்த நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ முக்கொம்பு புதிய அணை கட்டுமானப் பணியில் அலட்சியம்; கடலுக்குச் செல்லும் காவிரி நீர் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்..

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பெரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.65 இலட்சம் கன அடியாக உயர்ந்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியாக இருக்கிறது.

இந்நிலையில், பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று 3000 கன அடி நீரை தமிழக முதல்வர் திறந்துவைத்துள்ளார். ஆனால், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், காவிரி பாசன மாவட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படாமல், கடலில் போய் வீணாக கலந்துவிடும் நிலை கவலை தருகிறது. ஏனெனில், திருச்சி மாவட்டம் - முக்கொம்பு மேல் அணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் ஏழு மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.


மேட்டூரிலிருந்து அகண்ட காவிரியாக வரும் காவிரி ஆறு, திருச்சி மாவட்டம், முக்கொம்பு பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. காவிரியில் அதிக அளவில் வரும் தண்ணீர், காவிரி ஆற்றில் முழுமையாகச் செல்ல முடியாது என்பதால், முக்கொம்பு பகுதியிலிந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

முக்கொம்பு மேல் அணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்த்தர் தாமஸ் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு, 630 மீட்டர் நீளம், 45 மதகுகளுடன் முக்கொம்பு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மதகுகள் உடைந்ததால் புதிய அணை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதற்காக ரூபாய் 387.60 கோடி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை கடந்த 2018 டிசம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டது.

முக்கொம்பில் 55 கதவு அணைகளுடன் புதிய அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக புதிய அணை பணிகள் துரிதமாக நடைபெறாததால், அணை கட்டுமானம் முதற்கட்டப் பணியோடு நின்றுவிட்டது. இந்தப் புதிய அணையிலிருந்து 2 இலட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். இதனால் தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தற்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதும் விழலுக்கு இறைத்த நீராக கடலில் சென்று கலந்துவிடும்.

கடந்த ஓராண்டு காலமாக முக்கொம்பு புதிய அணைப் பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்திய தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது மேட்டூரிலிந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி டெல்டா சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்திடுமாறு வலியுறுத்துகிறேன். என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேராபத்து குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,

மேட்டூர் அணைக்கு தற்போது கபினி அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் விவசாய பாசன தேவைக்காக வினாடிக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்ற தகவல் உள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணியில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் முக்கொம்பு காவிரி ஆற்றில்தான் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூரில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. அப்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படும்.

புதிய பாலம் கட்டும் பணிகள் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இது அடுத்த ஆண்டுதான் நிறைவு பெறும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT